

தற்போது நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் முக்கியமான செய்தி எந்த கிரிக்கெட் வீரர், எத்தனை பணம் கொடுத்து ஏலத்தில் எடுக்கப் பட்டிருக்கிறார் என்பதே. சில பிரபல நாளிதழ்களில் இது முதல் பக்கச் செய்தி. முக்கியமான உலகச் செய்திகள், உள்நாட்டுச் செய்திகள் பல இருக்க, அவற்றைப் பின் தள்ளி முதலிடம் பெறுவது கிரிக்கெட் வீரர்களின் ஏலம்.
தொலைக் காட்சியில் ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளுக்காக கிரிக்கெட் வீரர்களைப் பொருட்களைப் போல ஏலத்தில் (Cricket auction) எடுப்பதைப் பார்க்கும் போது, எதிர்க்காலத்தில் வீதிகளில் “கிரிக்கெட் வீரர் வாங்கலியோ கிரிக்கெட் வீரர்” என்று கூவி விற்பார்களோ? எனத் தோன்றுகிறது. அப்போது இதைப் போன்ற பாடல்களும் உலா வரலாம்.
மனுஷனை மனுஷன் விற்குறாண்டா தம்பிப் பயலே
இது மாறுவதெப்போ தீறுவதெப்போ நம்ம கவலே
பெரிய ஏலக் கடைகளில் பொருட்களை ஏலம் விடுவதைப் பார்த்திருக்கிறேன். கால்நடைகள், பறவைகள் ஏலம் விடுவதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பண்டைய காலத்தில் பணம் படைத்தவர்கள், கீழ்தட்டு மனிதர்களை ஏலத்தில் எடுத்து அடிமைகளாக வைத்திருந்தார்கள் எனப் படித்திருக்கிறேன்.
கிராமங்களில், வறுமையில் வாடும் ஏழைகளை, பண ஆசை காட்டிக் கூட்டி வந்து தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்துக் கொள்வது அங்கங்கே இன்றும் நடைபெறுகிறது என்பதை செய்தித் தாள்கள் மூலம் அறிந்திருக்கிறேன்.
ஆனால் நாடறிந்த, உலகறிந்த, சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்களை ஏலமிடுவதும், அதை நேரடி ஒளிபரப்பு செய்வதும் நெருடலாகத் தோன்றுகிறது. ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்கள் அந்த அணியின் அடிமைகளா? நேரடி ஒளிபரப்பின் நடுவே விளம்பரம். ஏலத்தைப் பற்றிய வர்ணனை. இத்தனை பணம் கொடுத்து வாங்குவதற்கு இவர்கள் தகுதியானவர்களா? என்று நிபுணர்கள் என்ற போர்வையில் சில முன்னாள் வீரர்களின் விவாதம். இதனை அலசுவதற்கு இவர்கள் தகுதியானவர்களா, அத்தனை திறமைசாலிகளா என்று யார் விவாதிப்பார்கள்? என்ன செய்வது எங்கும் பணம், எதிலும் பணம்.
ஐ.பி.எல். ஒரு பணம் காய்ச்சி மரம். அணியின் உரிமையாளர், கிரிக்கெட் வீரர், கிரிக்கெட் போர்ட், தொலைக்காட்சி, அரசு என்று எல்லோருக்கும் பணம். ஐ.பி.எல். பற்றி எதை ஒளிபரப்பு செய்தாலும், விளம்பரம் செய்வதற்கும், ஒளிபரப்பை கண்கொட்டாமல் பார்ப்பதற்கும் நம்மைப் போன்ற மக்கள். இத்தனையும் சொல்லிக் கொண்டு ஏன் பார்த்தீர்கள் என்று கேட்பீர்கள். புத்தக கிரிக்கெட் தவிர, கிரிக்கெட் மட்டையையும், பந்தையும் எடுத்து விளையாடாதவன் நான். ஆனால் கிரிக்கெட் மாட்ச், ஒன் டே, டி20 எல்லாவற்றையும் பார்ப்பவன்.
ஐ.பி.எல். நல்ல பொழுது போக்கு என்று நினைப்பவன். ஏலம் விடும் நேரடி ஒளிபரப்பைப் பார்த்த பத்து நிமிடத்தில் மனம் வலிக்கத் தொலைக் காட்சிப் பெட்டியை தூக்கத்தில் ஆழ்த்தி விட்டேன்.
"சாதனையாளர்களை ஏலம் விடுகிறார்களே!" என்று என் மனம் பதறியது. ஆனால், “என்னை இத்தனை கோடிகள் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள்” என்று சில வீரர்கள் மகிழ்ச்சி அடைவதையும், “என்னை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லையே” என்று சிலர் வருத்தப்படுவதையும் பார்க்கும் போது “பணம் இருந்தால் போதுமடா உலகிலே” என்ற வரிகள் எத்தனை உண்மை என்று புரிகிறது.
கிரிக்கெட் வீரர்கள் நவீன அடிமைகளா? கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுக்கும் இந்த முறைக்கு மாற்றம் வந்தால் நன்றாக இருக்கும். அப்படி முடியவில்லை என்றால் ஏலம் என்ற சொல்லுக்காவது மாற்று கண்டுபிடிக்கலாமே!