இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் சீனியர் வீரர்களாக இருக்கின்றனர். இருவரது கிரிக்கெட் பயணமும் விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற நிலையில், எப்போது இவர்கள் ஓய்வு பெறுவார்கள் என்ற விவாதங்கள் இப்போதே எழுந்து விட்டன. இதுகுறித்து கபில்தேவின் கணிப்பு என்ன என்பதைப் பார்ப்போம்.
டி20 உலகக்கோப்பையை வென்றதும் கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். இருப்பினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தற்போது விளையாடி வருகின்றனர். அடுத்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த இரண்டு கோப்பைகளை வெல்வதே இப்போது ரோஹித் மற்றும் கோலியின் இலக்காக உள்ளன.
அதற்குப் பிறகு இவர்கள் ஓய்வு பெற்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவார்களா அல்லது 2027 உலகக்கோப்பையிலும் விளையாடுவார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் உள்பட பலருக்கும் உள்ளன. இந்நிலையில் நிச்சயமாக 2027 உலகக்கோப்பையில் இருவரும் விளையாடுவார்கள் என முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
ரோஹித் மற்றும் கோலியின் எதிர்கால கிரிக்கெட் பயணம் குறித்து கபில்தேவ் மேலும் கூறுகையில் “கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 26 வயது முதல் 34 வயது வரை தான் மிகச் சிறப்பாக விளையாடி அணிக்கு உதவ முடியும். இந்த வயதிற்கும் மேல் விளையாடுவது என்றால், அது அவர்களின் ஃபிட்னஸைப் பொறுத்தது தான். இருப்பினும் ஓய்வு குறித்து முடிவெடுப்பது எல்லாம், அவரவர்களின் தனிப்பட்ட முடிவாகும். முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 32 வயதிலேயே ஓய்வு பெற்று விட்டார். ஆனால் சச்சின் டெண்டுல்கர் 40 வயது வரை கிரிக்கெட்டை மிகச் சிறப்பாக விளையாடினார்.
கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என நினைத்தால், என்னைப் பொறுத்தவரை உடற்தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும் என பலரும் நினைப்பதுண்டு. ஆனால், அதற்கு நம் உடற்தகுதி ஒத்துழைக்க வேண்டும். கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் நல்ல உடற்தகுதியுடன் இருக்கின்றனர். ஆகையால், இன்னும் சில ஆண்டுகள் இவர்கள் விளையாடுவார்கள். 2027 உலகக்கோப்பைக்கு பிறகே இவர்களின் ஓய்வு முடிவு இருக்கும் என நினைக்கிறேன்” என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கு ஃபார்ம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு ஃபிட்னஸும் முக்கியம். 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வருகின்றனர். இந்த காலகட்டத்தில் தலா 15 போட்டிகளில் ரோஹித் சர்மா 44.00 சராசரியுடனும், விராட் கோலி 30.00 சராசரியுடனும் பேட்டிங் செய்கின்றனர். கடைசியாக வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் கூட இருவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தனர். எதிர்கால கிரிக்கெட் பயணம் குறித்து இவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றாலும், 2027 உலகக்கோப்பை தான் கடைசியாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கணித்துள்ளனர்.