கர்நாடகத்தைச் சேர்ந்த, 18 வயதே ஆன பிரகார் சதுர்வேதி என்னும் இளம் கிரிக்கெட் வீரர், 19 வயதுக்கு கீழானவர்களுக்கான ரஞ்சிக் கோப்பை போட்டியில் 638 பந்துகளை சந்தித்து 404 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
கூச்பெஹர் கோப்பைக்காக நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சதுர்வேதி 404 ரன்கள் குவித்து, முன்னாள் கிரிக்கெட் வீர்ர் யுவராஜ் சிங்கின் சாதனையை (358 ரன்கள்) முறியடித்துள்ளார். அதுமட்டுமல்ல கூச் பெஹர் டிராபியை கர்நாடகத்துக்கு பெற்றுத்தந்துள்ளார்.
சிவமொக்காவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 380 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கர்நாடகம் 223 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 890 ரன்களை குவித்தது.
அதிக ரன்கள் குவித்து யுவராஜ் சிங் சாதனையை முறியடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கூச் பெஹர் டிராபியை கர்நாடகத்துக்கு பெற்றுத்தந்தது அதைவிட மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் சதுர்வேதி.
சதுர்வேதியின் தந்தை சஞ்சய் குமார் சதுர்வேதி பெங்களூர் எலெக்ட்ரானிக்ஸ் சிட்டியில் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தாய் ரூபா, டி.ஆர்.டி.ஆ. வில் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார். விளையாட்டைவிட படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பம் என்றாலும் சதுர்வேதியின் ஆர்வத்துக்கு அவர்கள் தடையாக இல்லை.
8-வயதிலேயே கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். எனக்கு குடும்பத்தினர் ஆதரவு தந்தனர். அதிர்ஷ்டவசமாக படிப்பு மற்றும் விளையாட்டு இரண்டிலும் என்னால் கவனம் செலுத்த முடிந்தது. நான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதற்கு எனது பயிற்சியாளர் கார்த்திக் ஜஸ்வந்த்தான் காரணம் என்றார் சதுர்வேதி.
ஜஸ்வந்த் தொழில்நுட்ப திறன்மிகுந்தவர். பேட்டிங்கில் சிறிய தவறுசெய்தாலும் அதை கண்டுபிடித்து விடுவார் என்றார் சதுர்வேதி. ஜஸ்வந்த கர்நாடக அணியின் முன்னாள் கேப்டனாக, பயிற்சியாளராக, வீர்ர்கள் தேர்வுசெய்யும் குழுவில் பணியாற்றியவர்.
“பிரகார் சதுர்வேதி, பெல்லாந்தூரில் குடியிருந்தாலும், தேவனஹள்ளியில் உள்ள பயிற்சி மையத்துக்கு விடாமல் வருவதை வழக்கமாக வைத்திருந்தார். பேட்டிங்கில் சிறந்த அணுகுமுறையை பின்பற்றுபவர். நிர்பந்தமான சூழ்நிலையிலும் நிதானமாக ஆடுபவர். விரைவில் அவர் உச்சத்தை தொடுவார் என்று நம்புகிறேன்” என்றார் பயிற்சியாளர் ஜஸ்வந்த்.
கர்நாடக அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் 19-வயதுக்கு கீழானவர்கள் அணியின் பயிற்சியாளருமான கேபி.பவன் கூறுகையில், சதுர்வேதி சிறந்த ஆட்டக்காரர் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த ஆண்டு கூச் பெஹர் டிராபியில் அதிக ரன் எடுத்தவர். இந்த முறை நான்கு சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். மும்பை அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணிக்கு எதிராக விளையாடி சதுர்வேதி விளையாடி சாதனை படைத்துள்ளது பாராட்டத்தக்கது. விரைவில் அவர் கர்நாடக அணிக்கு விளையாடுவார் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.