இடது கை பேட்ஸ்மேனான வைபவ் ரஞ்சி ட்ராஃபியில் 12 வயதிலேயே அறிமுகமாகியிருக்கிறார். இவருக்கு பல இந்திய வீர்ரகளும் ஊக்கமளித்து வருகின்றனர். சச்சின் மற்றும் யுவராஜ் ஆகியோர் தனது 15 வயதில் ரஞ்சி ட்ராஃபியில் அறிமுகமானார்கள். அந்தவகையில் இளம் வீரர் வைபவ் அந்த சாதனையை முறியடித்திருக்கிறார்.
வைபவ் சூர்யவன்ஷி பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் மாவட்டத்திற்கு 17 கிமீ தொலைவில் உள்ள தாஜிபூர் என்ற சிறு கிராமத்தில் பிறந்தவர். இவர் ஒரு 4 வயதாக இருக்கும்போது ப்ளாஸ்டிக் பந்து மற்றும் பேட் வைத்து விளையாடியது மட்டுமல்லாமல் ஒவ்வொரு அடிக்கும் தனக்கு தானே உற்சாகமாக கைத் தட்டிக் கொள்வாராம். இதனைக் கவனித்த அவரின் தந்தை தினமும் அவருடன் வந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்.
வைபவ் பெரியவராகி விளையாடும்போதும் இவரின் தந்தை அவருடன் சென்று விளையாடுவார். இவரின் தந்தை ஒரு விவசாயி என்பதால் வைபவ் விளையாடுவதற்கென சிறு நிலத்தை ஒதுக்கி அருகில் இருக்கும் சில சிறுவர்களை அழைத்து வைபவுக்கு பந்து வீச சொல்வார். இப்படி ஒரு நான்கு வருடம் சென்ற பிறகு அவரின் தந்தை சமஸ்திபூரில் உள்ள ஒரு கிரிக்கெட் அகடாமியில் வைபவை சேர்த்து விட்டிருக்கிறார். அங்கு 2 வருடங்கள் பயிற்சி பெற்ற பிறகே வைபவ் அண்டர் 16 தொடரில் அறிமுகமாகி விளையாடியிருக்கிறார்.
வைபவ் பீகாரில் நடைபெற்ற மாவட்டங்களுக்குள்ளான ஹீமன் ட்ராஃபியில் வெறும் 8 போட்டிகளில் 800 ரன்கள் எடுத்து அந்த தொடரின் கதாநாயகன் ஆனார். இதன்பின்னர் வினோ மான்காட் ட்ராஃபியில் வெறும் ஐந்து போட்டிகளில் 400 ரன்கள் எடுத்து அசத்தினார்.
வைபவ் அண்டர் 19 போட்டிகளிலும் அதே அசத்தலான ரன் ரேட்ஸுடன் மிரட்டி வந்தார். குவான்ட்ராங்குலர் ட்ராபியில் அவர் வரிசையாக எடுத்த ரன்கள் பார்ப்பவர்களை ஆச்சர்ய படுத்தியது. ஐந்து போட்டிகளில் 53, 76, 41, 0 மற்றும் 12 ரன்கள் எடுத்து மூன்று போட்டிகளில் அபாரமாக விளையாடி ரன்களை எடுத்திருந்தார். அதேபோல் அண்டர் 23 தொடரில் தொடர்ந்து நல்ல ரன்களை எடுத்ததால் ரஞ்சி ட்ராபி நிர்வாகத்தின் கவனம் அவர் பக்கம் திரும்பியது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ப்ரைன் லாராவை தனது முன்னோடியாக வைத்திருக்கும் வைபவ், லாராவின் பேட்டிங் வீடியோவை பார்த்தே பேட்டிங் நுட்பங்களை கற்றுக்கொண்டிருக்கிறார். ப்ரைன் லாரா, 2004ம் ஆண்டு இங்கிலாந்தை எதிர்த்து விளையாடிய ஒரு போட்டியில் 400 ரன்கள் எடுத்திருந்தார். அந்த வீடியோவையே திரும்ப திரும்ப பார்த்து அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்து பேட்டிங் ஸ்டைலைப் புரிந்துக்கொண்டு அதனையே பின் பற்றிவருகிறார், வைபவ்.
அவரின் பல நாள் கனவு என்றால் அது ப்ரைன் லாராவைப் பார்க்க வேண்டும் என்பதுதான். அந்த கனவு ஒரு ஐபிஎல் தொடரில் நிறைவேறியது. ஆம்! லாராவை முதன் முதலில் பார்த்த வைபவ் இது உண்மைதானா என்று லாராவை முதலில் கிள்ளிப் பார்த்திருக்கிறார். லாரா சிரித்துக்கொண்டே வைபவ் கிரிக்கெட்டில் வலம் வர வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் கொடுத்துள்ளார்.
வைபவின் முதல் கனவு நிறைவேறியது என்றாலும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற வாழ்நாள் கனவுக்காக போராடி வருகிறார். அந்த போராட்டத்தின் முதல் கட்டமான ரஞ்ஜி ட்ராஃபியிலும் தடம் பதித்து சாதனையும் படைத்துள்ளார்.