எதற்காக தானியங்களை முளைகட்டி சாப்பிட வேண்டும்

எதற்காக தானியங்களை முளைகட்டி 
சாப்பிட வேண்டும்
Updated on

ருப்பு மற்றும் விதைகளை முளைகட்டி சாப்பிடுவது பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். முளைத்தல் என்பது இயற்கையின் வரப்பிரசாதம். முளைத்த பருப்புகளில் பருப்புகளுடன் வளரும் தன்மை உள்ள ஒருவித உயிர் சக்தி இருக்கிறது.

முளைத்தலின் பயன்கள்:

யல்பாக பருப்பு வகைகளில் இருக்கக்கூடிய வைட்டமின் பி, வைட்டமின் ஈ போன்றவற்றின் அளவு முளைத்தலின் மூலமாக பருப்புகளில் பலமடங்காகிறது. வைட்டமின் சி சிலவகை பருப்புகளில் முளைத்தலின் போது பத்து மடங்கு வரை அதிகமாகிறது.

அதேபோல் முளைத்தலின்போது வைட்டமின் பி, (தையமின்) வைட்டமின் பி2 (ரைபோஃளேவின்), நிக்கோடினிக் ஆசிட் என்ற வைட்டமினும் இரு மடங்குக்கும் அதிகமாகிறது.

பருப்பு வகைகளில் உள்ள இரும்புச்சத்து முளைத்தலின்போது ஏற்படும் வேதியியல், உயிரியல் மாற்றங்களால் நம் உடலில் எளிதில் ஊறிஞ்சக்கூடிய வகை இரும்புச் சத்தாக மாறுகிறது.

சில வகை பருப்புகளில் உதாரணமாக சோயா பீன்ஸ், பச்சையாக (அ) ஊற வைத்து உண்டால் அதில் உள்ள ஒருவகை புரோட்டீன்கள் நம் உடலக்கு ஒவ்வாத செயல்களை உண்டாக்கிவிடும். அஜீரணம், பேதி போன்றவற்றை உண்டாக்குவதோடு, உடலின் வன்மையாகக் குறைக்கவும் செய்யும். இதனால் இந்த வகை பருப்புகளை வேக வைத்து உண்கிறோம். அப்பொழுது அந்த நச்சுப் பொருள்கள் செயலிழக்கிறது. ஆனால் வேக வைக்கும்போது பருப்பு வகைகளில் உள்ள வைட்டமின்கள் அழிந்து விடுகின்றன (அ) வெளியேறி விடுகின்றன.

எனவே இந்த வகை பருப்புகளின் நச்சுத்தன்மையும் போக வேண்டும். வைட்டமின் அழியக்கூடாது என்றால் அதற்கு ஒரே வழி முளைக்க வைத்தலே ஆகும்.

இத்துடன் முளைக்க வைத்தலின்போது பருப்பு வகைகள் எளிதில் செரிமானம் ஆகக் கூடியவையாக மாற்றப் படுகின்றது. தேவைப்பட்டால் முளைத்த பருப்புகளை வேக வைக்கும்போது இவை எளிதில் வெந்து விடுவதால் எரிபொருளும் சிக்கனம்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வெந்தயத்தை வெறுமனே (அ) ஊற வைத்துத் தினமும் மென்று சாப்பிடுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அப்படிச் சாப்பிடும்போது ஒருவித கசப்புச் சுவையுடனும், குழ குழப்பும் வாயில் உண்டாகும். ஆனால் அதேசமயம் வெந்தயத்தை முளை கட்டின பிறகு சாப்பிட்டால் மேற்கூறிய கசப்பும், குழகுழப்பும் இல்லாமல் இருப்பதுடன் சுண்டல் சாப்பிடுவது போல சுவையாக இருக்கும்.

முளைக்க வைக்கக்கூடிய பருப்பு வகைகள்

பொதுவாக மூக்கடலை, பயறு, கேழ்வரகு, கோதுமை, வெந்தயம், தினை, கொள்ளு, உளுந்து, எள், சோயா, பட்டாணி போன்ற பொருள்களை முளைக்க வைத்துப் பயன்படுத்துவது மிக நல்லது.

மேற்கூறிய பொருட்கள் கலந்து செய்யப்படும் அனைத்து உணவு வகைகளிலும் அவற்றை முளைக்க வைத்துச் சேர்த்துப் பயன்படுத்தலாம். உதாரணமாக – இட்லி, சட்னி, கேழ்வரகு புட்டு, போளி, தோசை, வடை முதலியவைகள்.

logo
Kalki Online
kalkionline.com