அடுத்த உலககோப்பை தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா?

அடுத்த உலககோப்பை தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா?

பாகிஸ்தானில் 2025ம் ஆண்டு நடைபெறும் அடுத்த உலககோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா என்ற பிரச்சனை எழுந்துள்ளது. ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால், சில விதிமுறைகளை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த ஆண்டு ஐசிசி உலககோப்பைக்கான தொடர் இந்தியாவில் முதன்முறையாக நடைபெற்றது.ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலககோப்பை தொடர், அடுத்து 2025ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியும் சேர்த்து மொத்தம் 8 அணிகள் கலந்துக்கொள்ள உள்ளன.

ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு முன்னர் 1987ம் ஆண்டு தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சேர்ந்து உலககோப்பையை தொகுத்து வழங்கியது. ஆனால் பாகிஸ்தான் அணி இதுவரை தனித்து நடத்தியதில்லை. 2025ம் ஆண்டு நடைபெறும் உலககோப்பையே பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் முதல் தொடர்.

கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானில் நடைபெறும் எந்த தொடருக்கும் இந்திய அணி விளையாட சென்றதில்லை. தற்போதும் பாகிஸ்தானுக்கு போகும் சூழ்நிலையில் இந்தியா இல்லை, என்றே இந்திய கிரிக்கெட் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

இந்த ஆண்டிற்கான கிரிக்கெட் ஆசிய தொடர் ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானில் தான் தொடங்கியது. ஆனால் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லமாட்டோம் என்று கூறிய நிலையில் இத்தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டது. அதாவது நான்கு போட்டிகள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெற்றது. மற்ற அனைத்து போட்டிகளுமே இலங்கையில் தான் நடைபெற்றது.

இதனால் 2025ம் ஆண்டின் உலககோப்பை தொடருக்காக இந்தியா பாகிஸ்தான் வராமல், மீண்டும் இடம் மாற்றப்படுமோ என்ற சந்தேகம் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் எழுந்துள்ளது.

இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்ற கேள்வியை பிசிசிஐ யிடம் கேட்டால், அதற்கான முடிவை இந்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்று மலுப்பி வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஏற்கனவே ஆசிய கிரிக்கெட் தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்ட அதிருப்தியில் உள்ளது. அது மீண்டும் நடந்துவிடுமோ என்ற பயத்தில் ஐசிசியுடனான அடுத்த உலககோப்பை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருக்கிறது.

ஒருவேளை, இந்தியா பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், அதற்கான நஷ்ட ஈட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிற்கு வழங்க வேண்டும் என்று ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும் இடம் மாற்றுவதைக் குறித்து ஐசிசி தன்னிச்சையாக முடிவு எடுக்க கூடாது என்பன போன்ற விதிமுறைகளை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் என்றும் கூறி வருகிறது.

ஒருவேளை இந்திய அணி உலககோப்பையில் பங்கேற்கவே இல்லை என்றால் ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிற்கு பெரும் நஷ்டம் ஏற்படும். விளம்பரம் மற்றும் ஒளிப்பரப்பு செய்யும் ஏற்பாட்டில் இரு தரப்பினருக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படும்.

இதையடுத்து இந்திய அணி உலககோப்பையில் பங்கேற்குமா? இந்திய அரசு பாகிஸ்தான் செல்ல அனுமதிக்குமா? 15 ஆண்டுகள் தவத்தை கலைத்து இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் ஒப்பந்தத்தை ஐசிசி ஏற்குமா? என்பன போன்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com