விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் ஆன்ஸ் ஜபர், வான்ட்ரோஸோவா!

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் ஆன்ஸ் ஜபர், வான்ட்ரோஸோவா!
Published on

விம்பிள்டன் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் டுனீசியாவின் ஆன்ஸ் ஜபர், மார்கடா வான்ட்ரோஸோவா இருவரும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டுனீசியாவின் ஆன்ஸ் ஜபர், பெலாரசின் அர்யானா சபலென்காவை 6-7 (5), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் செக். குடியரசின் மார்கெடா வான்ட்ரோஸோவா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் பட்டம் வெல்லும் ஸ்விடோலினாவின் கனவு தகர்ந்தது.

இதைத் தொடர்ந்து டுனீசியாவின் ஆன்ஸ் ஜபர், செக். குடியரசின் வான்ட்ரோஸோவா இடையிலான இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது.அர்யானா சபலென்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதல் செட்டை நழுவிட்ட ஜபர் பின்னர் போராடி வென்றார். விம்பிள்டன் இறுதிச்சுற்றில் ஜபர் விளையாடுவது இது மூன்றாவது முறையாகும். கடந்த முறை நடைபெற்ற விம்பிள்டன் இறுதிச்சுற்றில் எலனா ரைபாகினாவிடம் தோல்வி அடைந்தார். இதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இகா ஸ்வியாடெக்கிடமும் அவர் தோற்றுப் போனார்.

தொடக்கத்தில் நான் சற்று பின்வாங்கினாலும், அடுத்தடுத்து சுதாரித்துக் கொண்டு துடிப்புடன் ஆடி சபலென்காவை வெற்றி கண்டேன். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான் என்றார் ஆன்ஸ் ஜபர்.ஜபருக்கு எதிரான ஆட்டத்தில் சபலென்கா போதிய உத்வேகத்துடன் ஆடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல முறை அவர் தவறு செய்தார். இது ஜபருக்கு சாதகமாக அமைந்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன், யு.எஸ். போட்டிகளில் இறுதிச்சுற்றில் நான் தோல்வி அடைந்தாலும் அவற்றிலிருந்து சில பாடங்களை கற்றுக்கொண்டேன். அந்த போட்டிகள் எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது. எனவே இந்த முறை வான்ட்ரோவாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் கடுமையாக போராடி பட்டத்தை வெல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்கிறார் வடக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆன்ஸ் ஜபர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் போட்டியில் ரன்னரான வான்ட்ரோஸோவா, இடது கை ஆட்டக்காரர். இந்த ஆண்டு ஒருமுறைகூட அவரை நான் ஜெயிக்கவில்லை. எனினும் சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் கடுமையாக போராடி அவரை வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார் ஜபர்.

விம்பிள்டன் போட்டியில் தரவரிசையில் இடம்பெறாம் இறுதிச்சுற்றை எட்டியுள்ள முதல் வீராங்கனை வான்ட்ரோஸோவாதான்.இதேபோல புல்தரை ஆட்டத்தில் இறுதிச்சுற்றை எட்டியுள்ள நான்குவது செக்கோஸ்லவோகியா வீராங்கனை வான்ட்ரோஸோவா. இதற்கு முன் ஜானா நவோட்னா, பெட்ரோ குவிட்டோவா மற்றும் கரோலின் பிளிஸ்கோவா ஆகிய மூவர் இறுதிச்சுற்றில் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே ஆடவர் இரட்டையர் போட்டியில் 6 ஆம் நிலை ஆட்டக்காரரான ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹோப், கிரேட் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி ஜோடியிடம் 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com