

ஐசிசி நடத்தும் டி 20 மகளிர் உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று(ஜூன்.14) இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்களது முதல் போட்டியில் மோதிக்கொண்டனர். இந்த மேட்ச் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலாவதாக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
இந்தியா- பாகிஸ்தான் ஆண்கள் அணிகள் மோதும் போட்டிகளுக்கு சற்றும் குறையவில்லாமல், மகளிர் அணி போட்டிகளிலும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. பாகிஸ்தான் அணி செய்யும் சேட்டைகளுக்கு, இந்திய அணி சரியான பதிலடியும் கொடுக்கும். இரண்டு நாடுகளுக்கு நடைபெறும் போட்டியில் பெரும்பாலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
முதலில் ஆட்டத்தை தொடங்கிய இந்திய மகளிர் அணி , தொடக்கத்திலேயே ஷாபாலி வர்மா மற்றும் ஜெமிமா விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆயினும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் இணைந்து பாகிஸ்தானின் பந்து வீச்சுகளை விளாசி எடுத்தனர். ஸ்மிருதி 44 பந்துகளில் 2 சிக்சர்கள் உள்பட 9 பவுண்டரிகளை விளாசி 68 ரன்களை எடுத்தார்.
மறுபுறம் கேப்டன் ஹர்மன்(36) நிதானமாக விளையாடி அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்ட நேரத்தில் களமிறங்கிய ரிச்சா கோஷ் அதிரடியாக 34 ரன்களை குவித்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 170/6 ஸ்கோரை எட்டியிருந்தது. பாகிஸ்தான் கேப்டன் சனா மற்றும் சடியா இக்பால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து இந்திய அணியின் ஸ்கோரை விரட்டிய பாகிஸ்தான அணி நல்ல துவக்கத்தை கொடுத்தது. முனிபா அலி 41 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார். ஆயினும் ஆட்டத்தின் போக்கினை தீப்தி சர்மா மாற்றி காட்டினார். சீரான இடைவெளியில் பாகிஸ்தான் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் சனா பாத்திமா டக் அவுட் ஆகி அணியின் தோல்வியினை உறுதி செய்தார்.
17 ஓவர்களில் பாகிஸ்தான் அனைத்து விக்கெட்களையும் இழந்து 106 ரன்களை எடுத்து தோல்வியுற்றது. 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணியின் வெற்றியினை தீப்தி ஷர்மா உறுதி செய்தார். அத்தோடு அவர் செய்த ரன் அவுட் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இந்த விக்கெட்டுகள் மூலம் மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 350 விக்கெட்களை வீழ்த்திய முதல் சுழற் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
டி20 உலக கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தை இந்திய அணி வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் ஹர்மன்பிரித் கவுர் ஒரு சாதனையும் செய்தார். மகளிர் டி20 உலக கோப்பை போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த இந்தியர்கள் பட்டியலில் 762 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடங்களில் மிதாலி ராஜ் (726), ஸ்மிருதி மந்தனா (592), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (408) மற்றும் பூனம் ராவத் (375) ஆகியோர் உள்ளனர். சர்வதேச அளவில் இந்த பட்டியலில் 9 வது இடத்தில் ஹர்மன் இருக்கிறார்.