மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: இறுதிச்சுற்றில் நுழைந்தது இங்கிலாந்து!

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: இறுதிச்சுற்றில் நுழைந்தது இங்கிலாந்து!

களிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதியில், இந்தப் போட்டியை இணைந்து நடத்தும் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட வேண்டும் என்று இரு அணிகளும் முனைப்புடன் விளையாடியபோதிலும் இங்கிலாந்துக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.

தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து அணியினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆஸ்திரேலிய அணியினர் இங்கிலாந்து அணிக்கு நிகராக ஈடுகொடுத்து விளையாட முயன்றும் அது நடக்கவில்லை. ஆட்டம் தொடங்கிய 36வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் எல்லா டூனே முதல் கோலை அடித்தார். தாக்குதல் ஆட்டத்தில் கைதேர்ந்த அவர், அலெஸ்ஸியா ருஸ்ஸோ அனுப்பிய பந்தை அருமையாக கடத்திச் சென்று கோலை நோக்கி அடித்தார். அவர் அடித்த பந்து கோல் போஸ்டின் வலது பக்கத்தில் உள்ளே சீறிப்பாய்ந்து கோலானது. இதையடுத்து இங்கிலாந்து 1 - 0 என முன்னிலை பெற்றது.

எனினும், ஆஸ்திரேலிய அணியினர், இரண்டாவது பாதி ஆட்டத்தில் துடிப்புடன் ஆடி எப்படியாவது ஒரு கோல் போட்டு சமன் செய்துவிட வேண்டும் என்று முயற்சித்தனர். 63வது நிமிடத்தில் அவர்களின் முயற்சி வெற்றிபெற்றது. அந்த அணியின் கேப்டன் சாம் கெர் சிறப்பாக ஆடி ஒரு கோல் போட்டார். தனக்குக் கிடைத்த பந்தை சாம் அருமையாகக் கடத்திச் சென்று மின்னல் வேகத்தில் கோலுக்கு அனுப்பினார். இங்கிலாந்து கோல் கீப்பர் மேரி இயர்ப்ஸ் அதைத் தடுக்க முயன்றும் முடியவில்லை.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் சாம் கெர், ஒரு கோல் போட்டதும் அந்த நாட்டின் கால்பந்து ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். எனினும், அவர்களது மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை. இங்கிலாந்து மீண்டும் ஆட்டத்தை தங்கள் கைக்குள் கொண்டுவந்தது.

ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் லாரென் ஹெம்ப், ஆஸ்திரேலிய அணியின் எல்லி கார்பென்டர் செய்த தவறை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். மில்லி பிரைட் தட்டிக்கொடுத்த பந்தை, தற்காப்பு ஆட்டக்காரரான எல்லி கார்பென்டர் சரியாக கையாளத் தவறினார். இந்த சமயத்தில் லாரன் ஹெம்ஸ், பந்தை தனது கட்டுக்குள் கொண்டுவந்து கோலுக்குள் திணித்தார். இதையடுத்து இங்கிலாந்து மீண்டும் 2 - 1 என்று முன்னிலை பெற்றது.

ஆட்டம் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இங்கிலாந்து அணி மூன்றாவது கோலை போட்டு வெற்றியை உறுதி செய்தது. ஹெம்ப் மிக சாதுர்யமாக பந்தை கடத்திவந்து ருஸ்ஸோவுக்கு அனுப்பினார். அதை அவர் திறமையாக கோலுக்கு அனுப்பினார். இதைத் தொடர்ந்து 3 - 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டு முறை அரையிறுதியில் வெளியேறிய இங்கிலாந்து அணி, இந்த முறை முதல் முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தை இங்கிலாந்து அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி தோல்வியைத் தழுவியபோதிலும் இங்கிலாந்துக்கு எதிராக முனைப்பு காட்டி விளையாடியது. ஆஸ்திரேலிய அணியின் மதில்டா தாக்குதல் ஆட்டத்தை விளையாடினார். அதேபோல, கேப்டன் சாம் கெர் சிறப்பாக விளையாடி அற்புதமாக கோல் போட்டதை மறக்க முடியாது. ஆஸ்திரேலியா வெற்றியை நழுவவிட்ட போதிலும் அவர்களின் ஆட்டம் கடைசி வரை விறுவிறுப்பு நிறைந்ததாகவே இருந்தது.

இதனிடையே, உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றில் இங்கிலாந்து அணியும், ஸ்பெயின் அணியும் மோதுகின்றன. போட்டியின் முடிவு எப்படி இருந்தாலும் மற்றொரு பரபரப்பான ஆட்டத்தைக் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com