உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா – பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றம்?

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா – பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றம்?

சிசி உலகக் கோப்பை - 2023 கிரிக்கெட் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி, நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கிரிக்கெட் தொடரில் உலகக் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர் மாதம் 15ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அக்டோபர் 15 அன்று இந்தியா முழுவதும் நவராத்திரி பண்டிகை தொடங்குவதால் இந்தப் போட்டியை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. அந்தப் பரிந்துரையில், ‘அக்டோபர் 15 நவராத்திரி தொடக்கம் என்பதால் குஜராத் மக்களுக்கு அன்றைய இரவு வழிபாட்டுக்குரிய காலமாக உள்ளது. அதேபோல், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இந்த கிரிக்கெட் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக உள்ளது. அதனால் இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் இந்தத் தேதியை மாற்ற வேண்டும்’ என்று பாதுகாப்பு அமைப்புகள் பிசிசிஐக்கு அறிவுறுத்தி உள்ளன.

இதுகுறித்து பேசிய பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர், “எங்களிடம் வந்த அறிவுறுத்தல்களை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். விரைவில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியினை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அகமதாபாத் நகருக்கு வருவார்கள். நவராத்திரி பண்டிகையும் அதே நாளில் தொடங்குவதால் பாதுகாப்பு காரணங்களால் இந்தப் போட்டியை மாற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நாளை புதுடெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் சங்கங்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில், ‘அகமதாபாத்தை சுற்றியுள்ள பாதுகாப்பு கவலைகள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் கவலை கொள்கின்றனர். தேதியை மாற்றுவது அனைவரின் நலன் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு இருக்கிறது.

இதைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு ஒரு தேதிக்கு மாற்றி வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com