
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இன்று ஹராரே நகரில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர்களில் வெறும் 181 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. அந்த அணியின் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 45 ரன்களை எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினர்.
அதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கோடு ஆட வந்த ஸ்காட்லாந்து அணி, 43.3 ஓவர்களில் வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 185 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை தகுதிச்சுற்று போட்டியில் இருந்து வெளியேற்றி இருக்கிறது. இதன் மூலம் இம்முறையும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் உலகக் கோப்பை கனவு கானல் நீராகிப் போனது.
கடந்த 2018ம் ஆண்டில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. அப்போது அம்பயரின் சர்ச்சைக்குரிய முடிவு மற்றும் திடீரென குறுக்கிட்ட மழை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாதகமாக அமைந்ததால் அந்த அணி ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. அதன் காரணமாக 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பையும் வெஸ்ட் இண்டீஸ் பெற்றது. இது நடைபெற்று ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது ஸ்காட்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை பழி தீர்த்து, சிறப்பான சம்பவத்தைச் செய்திருக்கிறது. இதன் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த வருடம் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை 2023 போட்டி தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்து இருக்கிறது.
முன்னதாக, லீக் சுற்றில் விளையாடிய 4 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று தனது பிரிவில் மூன்றாவது அணியாக சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. உலகக்கோப்பை தகுதிச்சுற்று அரையிறுதி போட்டிக்கு இலங்கை, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.