11 முட்டாள்கள் விளையாடுவதை, 11K முட்டாள்கள் பார்ப்பதுதான் 'கிரிக்கெட்' - பெர்னார்ட் ஷா!

Cricket vs Football
Cricket vs Football
Published on

‘பதினொரு முட்டாள்கள் விளையாடுவதை, பதினோராயிரம் முட்டாள்கள் பார்ப்பதுதான் கிரிக்கெட்‘ என்று விமரிசித்தார் பெர்னார்ட் ஷா. பிரிட்டிஷ்காரரான இவருடைய வாக்கை வேதவாக்காகக் கொண்ட நாடு – அமெரிக்கா. ஆமாம், அங்கே கிரிக்கெட் என்றாலே அது சோம்பேறிகளின் விளையாட்டு என்றுதான் கருதப்பட்டது.

ஒரு விளையாட்டு என்றால் அதிக பட்சம் இரண்டு மணி நேரத்தில் முடிய வேண்டும், வெற்றி – தோல்வி முடிவு அப்போதே தெரிய வேண்டும். இதை விட்டுவிட்டு ஐந்து நாட்கள் (அந்நாட்களில் டெஸ்ட் மேட்ச் மட்டுமே விளையாடப்பட்டது) இழுபறியாக, படு மந்தமாக விளையாடுவதும் ஒரு விளையாட்டா? இதில் மிகப் பெரிய சோகம், அந்த ஐந்து நாட்களுக்குப் பிறகும் சிலசமயம், மேட்ச் டிராவில் முடிவதுதான்! அட சட்! உப்பு சப்பில்லாத விளையாட்டு.

சரி, படு சுறுசுறுப்பான விளையாட்டு என்று இவர்கள் எதைக் கருதினார்கள்? கால்பந்து! இரு அணியிலும் எல்லா வீரர்களும், கோல்கீப்பர் உட்பட படு வேகமாக இயங்கித்தான் ஆகவேண்டும் என்ற துடிப்பான விளையாட்டு! அதனாலேயே அங்கே அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால், முதன்முதலில் தன் நாட்டிலேயே விளையாடப்பட்ட கிரிக்கெட்டை பெர்னார்ட் ஷா விமரிசித்ததை அமரிக்கர்கள் ரசித்தனர் என்றாலும், அவர்கள் அதற்கு மாற்றாகப் போற்றி விளையாடும் கால்பந்து விளையாட்டு அறிமுகமானதும் இங்கிலாந்தில்தான்! ஆமாம் கிராமப்புற இளைஞர்களின் அந்த விளையாட்டுதான் இங்கிலாந்து நகரங்களிலும் பரவியது!

உள்ளூர் போட்டிகள் என்று ஆரம்பித்த இந்த விளையாட்டு, 1872ம் ஆண்டு கிளாஸ்கோ நகரில் உலகளாவிய போட்டியாக எளிமையாக நடத்தப்பட்டது. பிறகு 1904ம் ஆண்டு வாக்கில் அகில உலக கால்பந்து கூட்டமைப்பு (Federation of International Football Association) உருவானது. இதுதான் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் இந்தப் போட்டியை அறிமுகப்படுத்தியது. 1908ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முதலாக அதிகாரபூர்வமான விளையாட்டாக கால்பந்து இடம் பெற்றது.

இந்தப் போட்டியை ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கண்டு களித்ததை கவனித்த ஃபிஃபா அமைப்பின் அப்போதைய தலைவர் ஜூல்ஸ் ரிமெட், அகில உலக அளவில் தொடர் போட்டிகளாக நடத்தினால் என்ன என்று யோசித்தார். இந்த வகையில் முதல் உலகக் கோப்பை கால்பந்தாட்டத் தொடர் 1930ல், உருகுவே நாட்டில் நடைபெற்றது. கலந்து கொண்ட நாடுகள், 13.

அதன் பிறகு நான்காண்டுகளுக்கு ஒருமுறை, கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு நடத்தப்பட்ட இந்தத் தொடர் போட்டிகள், இரண்டாவது உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946ம் ஆண்டுகளில் நடைபெறவில்லை.

2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டித் தொடர் இந்த வரிசையில் 19வது. அதோடு அந்த காலகட்டத்தில் இந்தப் போட்டியில்தான் அதிகபட்சமாக 32 நாடுகள் கலந்து கொண்டன.

இதையும் படியுங்கள்:
சர்வதேச அளவில் பெருமை சேர்க்கும் தமிழக விளையாட்டுகள், விளையாட்டு வீரர்கள்!
Cricket vs Football

இந்தப் போட்டித் தொடர் குரூப் பகுதி, நாக் அவுட் பகுதி என்று இரண்டு பகுதிகளைக் கொண்டது. குரூப் பகுதியில் தலா 4 அணிகள் கொண்ட 8 குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்குள்ளும் இருக்கும் 4 அணிகளும் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றன. இந்த ஆட்டங்களில் ஒவ்வொரு குழுவுக்குள்ளும் சிறந்து விளங்கும் 2 அணிகள் நாக் அவுட் பகுதிக்குள் நுழைகின்றன. இங்கே வென்றால் அடுத்த உயர்வுக்கு முன்னேற்றம், தோற்றால் வெளியேற்றம்தான். இதன்படி ஒவ்வொரு போட்டியிலும் ஒரு அணி வெளியேற, இறுதிப் போட்டியில் 2 அணிகள் மோதுகின்றன. இவற்றில் ஒன்று வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டம் வெல்கிறது. வெற்றிவாகை சூடும் அணி 420 மில்லியன் டாலர்களைப் பரிசாகப் பெறும். இதைவிட உலகெங்கிலுமிருந்து 700 மில்லியன் ரசிகர்கள் தங்கள் விளையாட்டை ரசிக்கிறார்கள் என்ற உணர்வே, வெற்றிபெற்ற அணிக்குப் பெரிய பெருமிதப் பரிசு!

கால்பந்து உலகக் கோப்பை வெறும் கோப்பையல்ல; அது அற்புதமான கலைப் பொக்கிஷம். 6 கிலோகிராம் எடையில் 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த பளபளப்பான கோப்பையில் அவ்வாறு வெற்றி பெற்ற கணத்தை அனுபவித்து மகிழும் இரண்டு வீரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் நிறைய விளையாடுங்கள்; வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்!
Cricket vs Football

உலகெங்கும் லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கொண்டுள்ள கால்பந்து விளையாட்டுப் போட்டியைப் போலவே இப்போது கிரிக்கெட்டும் ஏகப்பட்ட ரசிகர்களைப் பெற்றிருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம், 50:50; 20:20; ஐபிஎல் என்று கால அளவைச் சுருக்கிக் கொண்ட போட்டிகளாக மாறியதால்தான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com