பெல்கிரேடில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 53 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கல், பெலாரஸ் வீராங்கனை வனேஸா கலாட்ஜின்ஸ்கயாவிடம் தோல்வி அடைந்தார்.
வனேஸா கலாட்ஜின்ஸ்கயா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றவர். 30 வயதான அவர், இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர். டோக்கியோவில் நடந்த போட்டியில் இந்தியாவின் வினீஷ் போகத்தை வெற்றிகண்டவர்.
மேலும் இந்த வெற்றியின் மூலம் பாரீஸில் 2024 இல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கும் வனேஸா தகுதிபெற்றுள்ளார். இனி இறுதிப்போட்டியில் அவர், ஜப்பான் வீராங்கனை அகாரி ப்யூஜிநாமியை எதிர்கொள்வார். மற்றொரு அரையிறுதியில் அகாரி ப்யூஜிநாமி, கீரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ப்ரோவலராகியை வென்றார்.
வனேஸா கலாட்ஜின்ஸ்கயா முதல் சுற்று ஆட்டத்தில் பங்கலை பின்னுக்குத் தள்ளி 1-0 என முன்னிலை பெற்றார். ஆனால், இரண்டாவது சுற்றில் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த பங்கல் தவறியதால் தோல்வியைத் தழுவினார்.
எனினும் 19 வயதான ஆன்டிம் பங்கல் வெண்கலம் வெல்ல வாய்ப்பு உள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கையும் அவருக்கு உள்ளது.
முன்னதாக பங்கல் நடப்பு உலக சாம்பியன் ஒலிவியா டோமினிக் பாரிஷை அதிர்ச்சித் தோல்வி அடையச் செய்தார். முதல் சுற்றில் 0-2 என பின்தங்கியிருந்த பங்கல், பின்னர் எழுச்சிபெற்று 3-2 என ஒலிவியாவை தோற்கடித்தார்.
இதைத் தொடர்ந்து மற்றொரு போட்டியில் போலந்தின் ரோக்ஸனா மார்டா ஜாஸினாவை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். ரோக்ஸனாவை வெல்ல அவருக்கு ஒரு நிமிடம் மற்றும் 38 விநாடிகளே தேவைப்பட்டது. காலிறுதியில் ஆன்டிம் பங்கல், கனடா வீராங்கனை நாடாலியா மலிஷெவாவை 9-6 என்ற கணக்கில் வென்றார்.
உலக மல்யுத்தப் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் இந்திய வீராங்கனைகள் தடுமாறி வரும் நிலையில் ஆன்டிம் பங்கல், இந்தியாவுக்கு பதக்கம் வெல்லும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
--------------