wt20 wc : இன்று அரையிறுதியில் மோதும் இந்தியா-ஆஸ்திரேலியா! வெற்றி வாய்ப்பு யாருக்கு?

wt20 wc : இன்று அரையிறுதியில் மோதும் இந்தியா-ஆஸ்திரேலியா! வெற்றி வாய்ப்பு யாருக்கு?

தற்போது நடைபெற்று வரும் பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இன்றைய அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த அணியான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

முதல் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2009ம் ஆண்டு துவங்கிய நிலையில், இந்த வருடம் 8வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் இடம் பெற்றுளள நிலையில், 'ஏ' பிரிவில் 5 அணிகளும், 'பி' பிரிவில் 5 அணிகளும் இடம்பெற்று தற்போது லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளன.

இதையடுத்து, புள்ளி விவரப்படி, 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா 8 புள்ளிகளுடனும், தென் ஆப்பிரிக்கா 4 புள்ளிகளுடன் முறையே முதல் இரண்டு இடங்களைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல் 'பி' பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளிகளுடனும், இந்தியா 6 புள்ளிகளுடனும் முறையே முதல் இரண்டு இடங்களைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில், இன்று கேப்டவுனில் முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

இதுவரை 7 முறை நடந்துள்ள பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. ஆனால் இந்திய பெண்கள் அணி, இதுவரை ஒரு முறை மட்டுமே இறுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறியது. கடைசியாக 2020ம் வருடம் நடந்த உலகக் கோப்பை போட்டியில் அதுவும் ஆஸ்திரேலிய அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டு, 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, பேட்டிங்கில் அலிசா ஹீலி, கேப்டன் மெக் லானிங், பெத் மூனி, தாலியா மெக்ராத்தும், அதேபோல், பந்து வீச்சில் மேகன் ஸ்கட், ஆஷ்லி கார்ட்னெர், ஜார்ஜியா வார்ஹாம் என திறமையான வீரர்கள் வலு சேர்க்கிறார்கள்.

அதேபோல் இந்திய அணியில், ஸ்மிரிதி மந்தனா, ரிச்சா கோஷ், ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் என பேட்டிங்கிலும், பந்து வீச்சில் ரேணுகா சிங், தீப்தி ஷர்மா சிறப்பாக செயல்பட்டாலும், ஹர்மன் பிரீத், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா ஆகியோரின் ஆட்டங்கள் அவ்வப்போது சறுக்குவதால், இந்திய அணிக்கு சில நேரங்களில் பின்னடைவை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

இதுவரை 20 ஓவர் பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் 5 முறை சந்தித்ததில் ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டத்திலும், இந்தியா 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே கருதலாம். அதனால் இன்றைய ஆட்டம் சற்று விறுவிறுப்பாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com