

சென்னையில், பெண்களுக்கான 'டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் டென்னிஸ் திருவிழா வரும் நவம்பர் 2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டென்னிஸ் போட்டியில் பல நாடுகளை சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் இப்போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகள் பட்டியலை இறுதி செய்யும் பணி நேற்று நடந்தது.
இது தவிர இந்திய இளம் நட்சத்திரங்கள் மாயா ரேவதி, ஸ்ரீவள்ளி பாமிதிபதி, சஹஜா யாமலபள்ளி ஆகியோருக்கு நேரடியாக பிரதான சுற்றில் ஆடும் வகையில் ‘வைல்டு கார்டு’ சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதன்படி, தமிழகத்தை சேர்ந்த 16 வயதான இந்திய வீராங்கனை மாயா ராஜேஷ்வரன் ரேவதி, 23 வயதான, உலகத் தரவரிசையில் 377-வது இடத்தில் உள்ள ஸ்ரீவள்ளி பாமிதிபதி ஆகிய இருவரும் முதல் சுற்றில் நேரடியாக மோதவுள்ளனர். இவர்கள் சொந்த மண்ணில் அசத்தினால், கோப்பை வென்று சாதிக்கலாம்.
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதிப் போட்டியில் நேற்று, பிரான்ஸ் வீராங்கனை ஆஸ்ட்ரிட் லூ யான் ஃபூன், இந்திய வீராங்கனை வைஷ்ணவி அத்காரை எளிதில் வீழ்த்தினார். ஆனாலும் வைஷ்ணவி அத்கருக்கு பிரதான சுற்றில் விளையாடும் அதிர்ஷ்டம் கிடைத்தது. அதாவது நெருக்கடியான போட்டி அட்டவணை காரணமாக நியூசிலாந்தின் லுலு சன் கடைசி நேரத்தில் விலகி அந்த வாய்ப்பு வைஷ்ணவி அத்கருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் வைஷ்ணவி, முதல் சுற்றில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டோனா வெகிச்சுடன் மோத உள்ளார்.
மற்றொரு தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து வீராங்கனை அரியான் ஹார்டோனோ, இந்தோனேஷியா வீராங்கனை பிரிஸ்கா மேட்லின் நுக்ரோஹோ மோதினர். இப்போட்டியில் அரியான், 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். அதேபோல் ஜப்பானின் மெய் யமாகுச்சி 2-6, 6-4, 6-2 என ஆஸ்திரேலியாவின் அரினா ரோடியனோவாவை வீழ்த்தினார்.
சென்னை ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக, இப்போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதி போட்டிகள் நேற்று நடந்தன.
நடப்பு சாம்பியனான புருவிர்தோவா தனது சவாலை தகுதி நிலை வீராங்கனை பிரான்சின் ஆஸ்ட்ரிட் லியான் பூனுடன் தொடங்குகிறார்.
இரட்டையர் பிரிவில் மோனிகா நிகல்சுகு (ருமேனியா)- ஸ்டோம் ஹன்டர் (ஆஸ்திரேலியா) ஜோடிக்கு போட்டித் தரநிலையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. நேரடியாக கால்இறுதியில் கால்பதிக்கும் அவர்களுக்கே பட்டம் வெல்லும் வாய்ப்பு அதிகமாக தெரிகிறது.
இந்திய தரப்பில் லட்சுமி பிரபா- தியா ரமேஷ், ஸ்ரீவள்ளி- அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா- ருதுராஜா போசேல், வைஷ்ணவி அத்கர்- மாயா ரேவதி ஆகிய ஜோடிகள் களம் காணுகின்றன.
இந்தப் போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் கலந்து கொள்வதோடு இறுதியில் வெற்றி பெறுபவர்கள் போட்டியை வென்றதற்காக 250 தரவரிசைப் புள்ளிகளைப் பெற உள்ளனர்.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2.41 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றையர் பிரிவில் மகுடம் சூடும் வீராங்கனைக்கு ரூ.32 லட்சம் பரிசுத்தொகையுடன் 250 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும். இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடி ரூ.11½ லட்சம் பரிசாக பெறுவார்கள்.