

பெண்களுக்கும் IPL பாணியிலேயே மகளிர் பிரீமியர் லீக் (WPL) என்ற கிரிக்கெட் தொடரை பிசிசிஐ 2024-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி இருந்தது.2025-ஆம் ஆண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் ஏலம் நடைபெற்ற போது ஜி கமலினி என்ற தமிழக வீராங்கனையை மும்பை அணி நிர்வாகம் வாங்கியது. வெறும் 10 லட்ச ரூபாயை அடிப்படை விலையாக கொண்டிருந்த கமலினியை 1.60 கோடி கொடுத்து மும்பை அணி வாங்கியது இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. யார் இந்த தமிழக வீராங்கனை கமலினி?
மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கமலினியின் தந்தை குணாளன், ஒரு லாரி உரிமையாளர். கல்லூரி காலத்தில் கிரிக்கெட் வீரராக இருந்த அவர், தனது மகனை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக்க விரும்பினார். கொரோனா காலத்தில் தனது மகனுக்கு வீட்டின் அருகே வலை அமைத்துப் பயிற்சி அளித்தார். அப்போது 12 வயதே ஆன கமலினி பந்தை எடுத்து அசாதாரணமாக வீசியதை பார்த்து வியந்துள்ளார். யாரும் அவளுக்கு பந்து வீச கற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் அவள் அதை முதல் முயற்சியிலேயே செய்தாள், அவளுக்கு ஒரு திறமை இருந்தது,” என்று குணாளன் தன் மகள் கமலினியை பற்றி பெருமையுடன் கூறுகிறார்,
மகளின் அபாரத் திறமையைக் கண்டறிந்த குணாளன், மதுரையில் போதிய புல் தரை மைதான வசதிகள் இல்லாததால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்துடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியில் கமலினியைச் சேர்த்தார். மாதம் 8 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி, ஒரு நாளைக்கு 5 மணி நேரம் என கமலினி கடும் பயிற்சியை மேற்கொண்டார். இதன் மூலம் ஒரு சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் அவர் உருவெடுத்தார்.
2021-ல் 15 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய கிரிக்கெட் தொடரில் தமிழக அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற கமலினி, அந்தத் தொடரில் 485 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரிலும் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துத் அசத்தினார். இவரது விக்கெட் கீப்பிங் திறமையையும், பேட்டிங் வேகத்தையும் கண்ட தேசிய கிரிக்கெட் அகாடமி இவருக்குப் பல்வேறு சான்றிதழ்களை வழங்கி அங்கீகரித்தது.
முன்னாள் தமிழக கிரிக்கெட் வீராங்கனை ஆர்த்தி கமலினியின் வளர்ச்சியைப் பற்றிக் கூறும்போது, "கமலினி ஒரு பிறவித் திறமைசாலி; எதையும் மிக எளிதாகக் கற்றுக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர். அதனால்தான் மிகக்குறுகிய காலத்தில் அவரால் சிறந்த விக்கெட் கீப்பராக மாற முடிந்தது. கடின உழைப்பும் இலக்கும் கொண்ட அவர், நிச்சயம் இந்திய அணியில் நீண்ட காலம் நிலைத்து நிற்பார்" எனப் பாராட்டியுள்ளார்.
தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் (15 பேர் கொண்ட குழு) இடம்பிடித்துள்ள கமலினி, இந்தச் செய்தியைத் தன் வாழ்நாளின் மறக்க முடியாத தருணம் எனக் குறிப்பிடுகிறார். தனது பெற்றோரின் ஐந்து வருடக் கடின உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். 2025-ஆம் ஆண்டைத் தனது வாழ்வின் மிகச்சிறந்த ஆண்டாகக் கருதும் அவர், இந்தியாவிற்காக இன்னும் பல போட்டிகளில் விளையாடி வெற்றிகளைப் பெற்றுத் தருவதே தனது லட்சியம் என உறுதியளித்துள்ளார்.