
உலகளவில் இன்று கிரிக்கெட் மிகவும் பிரசித்தி பெற்ற விளையாட்டாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம், இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தான். மற்ற நாடுகளில் நடத்தப்படும் கிரிக்கெட் தெடர்களை விடவும், ஐபிஎல் அதிக வரவேற்பைப் பெற்றதற்கு முக்கிய காரணமே பிசிசிஐ-யின் நேரத்தியான செயல்பாடு தான். மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த அளவிற்கு பிரபலமான ஐபிஎல் தொடர் உருவாகக் காரணமே ஓர் இந்திய வீரர் தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? யார் அந்த வீரர்? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே கிரிக்கெட்டை அலங்கரித்துக் கொண்டிருந்த காலத்தில், டி20 கிரிக்கெட்டை புகுத்தியது ஐசிசி. டி20 கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால், 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பை நடத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் பிசிசிஐ உயர் அதிகரிகளில் ஒருவராக இருந்த லலித் மோடி, ஐபிஎல் தொடரை கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருந்தார்.
உலகக்கோப்பையின் லீக் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணியில், யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டினார். அதோடு வெறும் 12 பந்துகளில் அரைசதத்தைக் கடந்து சாதனைப் படைத்தார். யுவராஜ் சிங்கின் இந்த அதிரடி தான் ஐபிஎல் தொடர் உருவாகக் காரணம் என லலித் மோடி சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து லலித் மோடி மேலும் கூறுகையில், “2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பங்கேற்கச் சென்ற இந்திய அணியுடன் நானும் சென்றிருந்தேன். கிரிக்கெட்டில் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் அல்லது 6 விக்கெட்டுகளை எடுப்பது அசாதாரண விஷயம். இந்தச் சாதனையை உங்களில் யார் நிகழ்த்தினாலும், அவருக்கு போர்ஷே காரை பரிசாக அளிப்பேன் என்றேன். நான் நினைத்தது போலவே உலகக்கோப்பையில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டினார் யுவராஜ் சிங்.
இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்க விட்டு சாதனைப் படைத்தார் யுவராஜ். அப்போது கிரிக்கெட் உலகை ஒரு புயல் தாக்குவது போல இருந்தது. யாருமே இப்படி ஒரு சாதனையை யுவராஜ் செய்வார் என்றே நினைத்துப் பார்க்கவில்லை. அன்றைய பத்திரிகை செய்திகள் முழுக்க யுவராஜின் 6 சிக்ஸர்கள் பற்றிய பேச்சு தான். போட்டி முடிந்த பிறகு, யுவராஜ் சிங் நேராக என்னிடம் வந்து போர்ஷே கார் எங்கே எனக் கேட்டார். யுவராஜ் அடித்த சிக்ஸர்களில் இருந்து உதயமானது தான் ஐபிஎல் தொடர்” என லலித் மோடி சமீபத்தில் தெரிவித்தார்.
தற்போது வரை ஐபிஎல் தொடரின் 16 சீசன்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பால் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. நாட்கள் செல்லச் செல்ல ஐபிஎல் தொடர் மீதான பார்வை, உலகளவில் மேலும் பரந்து காணப்படும். இத்தொடரின் மூலமாக தான் பல இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வகையில் பல வீரர்களின் கிரிக்கெட் கனவு நனவானதற்கு முக்கிய காரணம் யுவராஜ் சிங் தான் என நினைக்கும் போது, இந்திய கிரிக்கெட் ரசிகராக எனக்கும் பெருமையாகவே உள்ளது.