ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து அரையிறுதிக்கான அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அதன்படி நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. ஏறக்குறைய வெளியேறும் நிலைமையில் சிக்கித் தவித்த பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து அளித்த வாய்ப்பின்மூலம் அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது.
இதற்கு முன்னதாக இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, கடந்த அக்டோபர் 30-ம் தேதியன்ற தனது ட்விட்டர் பக்கத்தில் 'பாகிஸ்தான் அணியின் ஹோம் டெலிவரிக்காக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது' என ட்விட் செய்தது. அதாவது பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாமல் நாடு திரும்புவார்கள் என்ற அர்த்தத்தில் அந்த ட்விட் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டிகளில் நெதர்லாந்து அணியிடம் தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்தது, வங்களாதேசத்தை வீழ்த்தியது காரணமாக பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு அதிரடியாக சற்றும் எதிர்பாராத வகையில் நுழைந்தது.
இந்நிலையில் சொமேட்டோவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், பாகிஸ்தானின் வாகன சேவை மற்றும் உணவு டெலிவரி நிறுவனமான கரீம் பாகிஸ்தான் டிவிட்டரில், ரீட்விட் செய்துள்ளது.
அதில், சொமேட்டோவுக்கு பதிலடியாக 'ஹோம் டெலிவரி நிராகரிக்கப்பட்டது' என ட்விட் செய்துள்ளது வைரலாகியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு இணையாக டிவிட்டரில் சொமேட்டோ - கரீம் பாகிஸ்தான் ஆகிய இரு நிறுவனங்களும் ட்விட்டரில் மறைமுகமாக மோதி வருகின்றன என்பது குறிப்பிடப்பட்டது.