ஆப்கானிஸ்தானை வெல்லும் நம்பிக்கையில் இந்தியா!

india vs afghanistan
india vs afghanistan

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, இன்று புதுதில்லியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தானை வெல்லும் நம்பிக்கையில் இந்தியா இருந்தாலும் அந்த அணியை சாதாரணமாக நினைத்துவிட முடியாது.

உலக கோப்பை போட்டியின் ஆரம்பமாக கடந்த 8 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கே.எல். ராகுல் (97), விராட் கோலி (85) இருவரும் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் இதுவரை 3 ஒருநாள் சர்வதேச போட்டியில் நேரடியாக மோதியுள்ளன. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்தியா கடுமையாக போராடித்தான் ஆப்கானிஸ்தானை வெற்றிகொள்ள முடிந்தது. அந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்தது. நூலிழையில் இந்தியா வென்றது.

இதேபோல 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 252 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. இந்த இரண்டு போட்டிகளையும் யாரும் எளிதில் மறந்துவிட முடியாது.

சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அதிரடியாக விளையாடி 428 ரன்களை குவித்தது. இலங்கை அணி தோல்வி அடைந்த போதிலும் தன் பங்குக்கு 326 ரன்களை எடுத்தது. அதாவது தில்லி மைதானத்தில் ஒரேநாளில் 754 ரன்கள் சாதனை அளவாக குவிக்கப்பட்டன.

ஆனால், இன்றைய போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு பலம் அதன் சுழற்பந்துவீச்சுதான். அந்த அணியில் ரஷீத் கான், முஜிப் உர் ரஹ்மான் மற்றும் அனுபவம் வாய்ந்த முகமது நபி ஆகியோர் உள்ளனர். அவர்களது மாயாஜாலம் இன்று எடுபடுமா என்பது தெரியவில்லை.

இந்திய அணி சுழற்பந்து வீச்சாளருக்கு பதிலாக மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை அணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அஸ்வினுக்கு பதிலாக முகமது ஷாமி அல்லது ஷர்துல் தாகுர் அணியில் இடம்பெறலாம்.

சுப்மன் கில், உடல்நிலை பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை என்பதால் அவர் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை.

இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் இன்றைய போட்டியில் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகுர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷாமி, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ்.

ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹமத்துல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜர்தன், ரியாஸ் ஹஸ்ஸன், ரஹ்மத் ஷா, நஜ்புல்லா ஜர்தன், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மதுல்லா ஓமர்ஜாய், ரஷீத்கான், முஜிப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபஸல்ஹக் பரூக்கி, அப்துல் ரஹ்மான் மற்றும் நவீன் உல் ஹக்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com