ராச்சின் ரவீந்திரா, கான்வே விளாசல், இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து!

 New Zealand beat England
New Zealand beat England

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை முதல் போட்டியிலேயே வீழ்த்தியது நியூஸிலாந்து.

உலகக் கோப்பைக்கான முதல் போட்டி வியாழக்கிழமை ஆமதாபாதில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன், இங்கிலாந்தை முதலில் களத்தில் இறக்கினார். இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து அணி, ஒருவிக்கெட்டை மட்டும் இழந்து 283 ரன்களை குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

நியூஸிலாந்து அணியின் தேவன் கான்வேயும், ராச்சின் ரவிச்சந்திரனும் அதிரடியாக ஆடி வெற்றிக்கு உதவினர். கான்வே 152 ரன்களுடனும், ரவீந்திரா 123 ரன்களுடனும் கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தனர்.

நியூஸிலாந்து அணியில் கேப்டன் கானே வில்லியம்சன், இஷ் சோதி மற்றும் டிம் செளத்தீ ஆகிய மூன்று முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. இருந்த போதிலும் அந்த அணியினர் திறமையாக விளையாடி வெற்றியை கைப்பிடித்தனர்.

உலக கோப்பை போட்டியில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை ராச்சின் ரவீந்திரா பெற்றார். ராச்சின், கான்வே இருவரும் அவுட்டாகாமல் இரண்டாவது விக்கெட்டுக்கு 273 ரன்கள் சேர்த்தனர். இதுவும் ஒரு சாதனையாகும்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களில் சாம் கர்ரன் மட்டும் 6 ஓவர்கள் பந்துவீசி 47 ரன்கள் கொடுத்து நியூஸிலாந்தின் வில் யங் விக்கெட்டை கைப்பற்றினார். ஆதில் ரஷீத், மொயீன் அலி ஆகிய இருவரின் சுழற்பந்து வீச்சையும் கான்வே மற்றும் ரவீந்திர இருவரும் சிதற அடித்தனர். வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 5 ஓவர்கள் வீசி 55 ரன்கள் கொடுத்த போதிலும் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

கான்வே, ரவீந்திரா இருவரும் சேர்ந்து 30 பவுண்டரிகளையும் 8 சிக்ஸர்களையும் விளாசினர்.

நியூஸிலாந்தை எளிதில் வென்றுவிடலாம் என்று நினைத்த இங்கிலாந்து அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

முன்னதாக இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் ஜோ ரூட் மட்டும் ஓரளவு நின்று ஆடி 77 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியிடம் வழக்கமான ஆக்ரோஷமான ஆட்டத்தை காண முடியவில்லை.

ஹாரி புரூக் 25 ரன்களும், ஜோஸ் பட்லர் 43 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை.

முதல் போட்டி எங்களுக்கு தோல்வியைத் தந்தாலும் நாங்கள் மனம் தளர்ந்துவிட வில்லை. இன்னும் பல போட்டிகளை நாங்கள் சந்திக்க இருக்கிறோம். நிச்சயம் வெற்றியை குவிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணி அடுத்து வருகிற 9 ஆம் தேதி நெதர்லாந்து அணியை சந்திக்கிறது. இந்த போட்டி ஹைதராபாதில் நடைபெறுகிறது. 10 ஆம் தேதி தர்மசாலாவில் இங்கிலாந்து வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com