கானே வில்லியம்சன், டாரில் மிட்சல் விளாசல்! வங்கதேசத்தை எளிதில் வென்றது நியூஸிலாந்து!

New Zealand beat Bangladesh
New Zealand beat Bangladesh

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கேப்டன் கானே வில்லியம்சன் மற்றும் டாரில் மிட்செல் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினர். நியூஸிலாந்து அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும்.

முதலில் விளையாடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்து அணி 42.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 248 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது.

246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூஸிலாந்து களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ராசின் ரவீந்திரா, எதிர்பார்த்த அளவில் விளையாடவில்லை. 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முஸ்தாபிஜுர் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

எனினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தேவன் கான்வே, கானே வில்லியம்சனுடன் சேர்ந்து நின்று ஆடி வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்களை கதிகலங்கச் செய்தனர். இருவரும் சேர்ந்து 80 ரன்கள் கூட்டாக எடுத்தனர். இந்த நிலையில் தேவன் கான்வே 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாகிப் பந்துவீச்சில் எல்பிடபிள்யூவாகி அவுட்டானார்.

பின்னர் கானே வில்லியம்சனும், டாரில் மிட்சலும் ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். எடுத்த எடுப்பிலேயே மிட்செல் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது கானேவுக்கு உற்சாகம் அளித்தது. விரைவிலேயே அவர் 50 ரன்களை குவித்தார். எனினும் 78 ரன்கள் எடுத்திருந்தபோது இடது கையில் அடிபட்டதால் ரிடயர்டு ஹர்ட் ஆனார். ஆனாலும் மிட்செல் அதிரடியாக ஆடி 89 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். கிளென் பிலிப்ஸ் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் நியூஸிலாந்து அணி 42.5 ஓவர்களில் 248 ரன்களைக் குவித்து வெற்றியை உறுதிசெய்தது.

முன்னதாக டாஸ் ஜெயித்த நியூஸிலாந்து அணி,  வங்கதேச அணியை பேட் செய்ய வைத்தது. இந்த முடிவு நியூஸிலாந்துக்கு சாதகமாக அமைந்தது.

வங்கதேச அணியில் லிட்டன்தாஸ், டான்ஸிட் ஹஸ்ஸன் இருவரும் களத்தில் இறங்கினர். ஆனால், முதல் பந்திலேயே லிட்டன் தாஸ் அவுட்டாகி வெளியேறினார். போல்ட் வீசிய பந்தில் ஹென்றியிடம் கேட்ச் கொடுத்து அவர் அவுட்டானார். பின்னர் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே வங்கதேசம் 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து முஷ்பிகுர் ரஹிம் மற்றும் கேப்டன் ஷாகிப் அலி ஹஸன் இருவரும் சற்று நிதானமாக ஆடி கூட்டாக 94 ரன்கள் சேர்த்தனர். ஆனாலும் ஷாகிப் அலி வெகுநேரம் களத்தில் நீடிக்கவில்லை. 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெர்குஸன் வீசிய பந்தில் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அணியில் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மெனுமான ரஹிம் மட்டும் ஓரளவு நின்று ஆடி 75 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அவருடன் சேர்ந்து ஆடிய மஹமுதுல்லா கடைசிவரை அவுட்டாகாமல் 41 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர் லாக்கி பெர்குஸன் 10 ஓவர்கள் வீசி, 49 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போல்ட், ஹென்றி இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com