3-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றி!

india vs Australia ODI
india vs Australia ODI

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிபெற்றது. எனினும் இந்தியா, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2க்கு 0 என தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 352 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 49.4 ஓவர்களில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று முழுமையாகத் தொடரை வெல்ல இந்தியா நினைத்தது. ஆனால், அது நடக்கவில்லை.

காயங்கள் காரணமாக நீண்டநாள் ஓய்வுக்குப் பின் அணிக்குத் திரும்பிய கிளென் மாக்ஸ்வெல் பேட்டிங்கில் சாதிக்கவில்லை என்றாலும் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓரளவு நின்று ஆடிய போதிலும் இந்திய அணி வெற்றிபெற முடியவில்லை.

ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னரும், மிட்செல் மார்ஷும் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் பந்துகளை அடித்துஆடி 78 ரன்களைச் சேர்த்தனர். எனினும் வார்னர் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அடுத்து மார்ஷும், ஸ்டீவ் ஸ்மித்தும் 2-வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தனர். மார்ஷ் 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நூலிழையில் சதத்தை தவறிவிட்டு குல்தீப் பந்துவீச்சில் அவுட்டானார். அவர் எடுத்த 96 ரன்களில் 13 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.

மார்னஸ் வபுஸ்சாக்னே நின்று ஆடி 72 ரன்கள் எடுத்து உலகக் கோப்பை அணியில் தாம் இடம்பெறுவதை உறுதிசெய்தார்.

இந்திய பந்துவீச்சாளர்களான பும்ரா 81 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிராஜ், பிரசித் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா களம் இறங்கியது. ஆசிய கோப்பையில் இலங்கை, பாகிஸ்தானை திணற அடித்த இந்திய அணி, ஆஸிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளை வென்ற இந்திய அணியால், மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெல்ல முடியவில்லை. ராஜ்கோட் மைதானம் பேட்ஸ்மென்களுக்கு சாதகமான ஆடுகளம் என்ற போதிலும் இந்திய அணியால் அதிக ஸ்கோர்களை எட்ட முடியவில்லை.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாகுர் மற்றும் முகமது ஷாமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. காய்ச்சல் காரணமாக கடைசி நேரத்தில் இஷான் கிஷன் அணியில் இடம்பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் அணியில் இடம்பெறவில்லை.

இந்திய அணியில் ரோகித் சர்மாவும், வாஷிங்டன் சுந்தரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ரோகித் 81 ரன்கள் எடுத்திருந்தபோது மாக்ஸ்வெல் பந்தில் அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களில் மாக்ஸ்வெல் வீசிய பந்தில் வீழ்ந்தார்.

அடுத்து களத்தில் இறங்கிய விராட் கோலி ஓரளவு நின்று ஆடி 56 ரன்கள் எடுத்தார். ஆனாலும், மாக்ஸ்வெல் வீசிய பந்தை அடிக்கப் போய் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதன் பின் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவால் அதிரடியாக ரன்களை குவிக்க முடியவில்லை. 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர், மாக்ஸ்வெல் வீசிய பந்தில் அவுட்டானார். கே.எல்.ராகுல், சூரியகுமார் இருவரும் குறைந்த ரன்களிலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இந்த நிலையில் இந்திய அணி 49.4 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மாக்ஸ்வெல் 4 விக்கெட்டுகளையும், ஹாஸில்வுட் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், கம்மின்ஸ், சங்கா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com