கடலுக்கு மேலே ஆகாயத்தில் பறந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு பரவச அனுபவத்தை அளிக்கும் விளையாட்டு இது. சென்னையின் புறநகர் பகுதியான பாலவாக்கத்தில் இந்த சாகச விளையாட்டுக்கான ஏற்பாடு உள்ளது. அங்கே இதற்கான தகுந்த பயிற்சியாளர்களும் இருக்கிறார்கள். இந்த சாகசத்தை சுமார் அரை மணி நேரம் செய்வதற்கு 3500 ரூபாய் போல வசூலிக்கிறார்கள். 5 வயதை தாண்டி 70 வயதுக்குள் இருப்பவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
சென்னையின் மையப்பகுதியில் பரபரப்பான போக்குவரத்து நெரிசலில் சைக்கிளில் செல்வது என்பது சுகமான ஒன்று அல்லதான். என்றாலும் கிழக்கு கடற்கரைச்சாலை போன்ற சில பகுதிகள் சைக்ளிங் செல்வதற்கு மிகவும் ஏற்றது. தரமான சாலை, மேடு பள்ளம் இல்லாத பகுதி, சைக்கிளுக்கு என்றே தனியான பாதை எல்லாமாகச் சேர்ந்து இந்த அனுபவத்தை சிறப்பானதாக ஆக்குகிறது. ஹெல்மெட் அணிந்துகொண்டு இறுக்கமான உடைகளுடன் இதில் கலந்து கொள்வது வழக்கம். இது ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சி. பிற சாகச விளையாட்டுகளோடு ஒப்பிடும்போது இதில் ரிஸ்க் குறைவு. தசைகள் வலுப்பெறுகின்றன. இதை மேற்கொள்ள பெரிய அளவில் உடல் ஃபிட்னஸ் தேவை இல்லை. பெரும் பந்தயங்களில் கலந்து கொள்ள தேவைப்படும் ஸ்போர்ட்ஸ் சைக்கிள் விலை சில லட்சங்கள்! என்றாலும் பத்தாயிரம் ரூபாய் என்ற விலை கொண்ட சைக்கிள்கள் கூட உடற்பயிற்சிக்கு மிக ஏற்றவை தான்.
ஸ்கூபா டைவிங் என்பது கடலுக்கடியில் மூழ்கும் ஒரு பயிற்சி. சென்னை மிக நீளமான கடற்கரை பகுதியை கொண்ட ஒரு நகரம். கடல் நீரின் கீழ் பகுதியில் உள்ள அழகுகளை ரசிக்க முடியும்.
நீருக்கடியில் சுவாசிக்க பயன்படும் மூச்சு எந்திரத்தைதான் ஸ்கூபா என்கிறார்கள். (இதன் விரிவாக்கம் self-contained underwater breathing apparatus). அழுத்தப்பட்ட இந்த காற்று கொண்ட உருளையை முதுகில் மாட்டிக்கொண்டு சுதந்திரமாக நீண்ட நேரம் மூழ்கி நீந்த முடியும்.
கடல் வாழ் உயிரினங்களை அற்புதமாகக் கண்டு களிக்க ஸ்கூபா டைவிங் உதவுகிறது. முக்கியமாக கோவளம் கடற்கரையில் இந்த வசதியைக் காண முடியும். இதற்கான உடைகளை வாடகைக்குப் பெற முடியும்.
பாராஸ்கீயிங் என்றும் இதைக் கூறுவதுண்டு. காற்றாடியோடு ஒட்டிக்கொண்டு நாமும் பறந்தால் எப்படி இருக்கும்? இந்த கற்பனையின் நடைமுறைத்தன்மைதான் பாராசெயலிங். காற்றாடியின் நூலைப் பிடித்து இருப்பவரோடு ஒரு ட்ரக் அல்லது படகை ஒப்பிடலாம். கீழே உள்ள இந்த வாகனம் இயங்கும்போது மேற்புறமுள்ள பாரசூட் போன்ற சாதனத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் மனிதர் வானத்தில் பரவசமாகப் பறப்பார். மெரினா கடற்கரையில் கூட இது அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படுகிறது.
இருவர் மட்டுமே அமரக்கூடிய ஒரு எளிய விமானத்தில் அமர்ந்து 1000 அடி உயரத்தில் ஆகாயத்தில் பறக்கலாம். ஆனால் இதற்கு செலவு நிறைய ஆகும். மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப் ஏற்பாடு செய்யும் இந்த சாகசத்துக்கு நீங்கள் இருபத்தைந்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும் (ஒருமுறைக்குதான்).
ஆக பரபரப்பான சென்னை நகரம் சாகசச் சென்னை நகரமாக விளங்கி, விளையாட்டுகளுக்கான வாய்ப்புகளையும் அளித்துக் கொண்டிருக்கிறது.