
FIFA உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டிகள் ஜூலை 20ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 20ம் தேதி வரை நடைபெற்றன. கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியின் கேப்டன் ஓல்கா கார்மோனா, தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் 29வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை 2023 சாம்பியன் பட்டத்தை, 1 - 0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி கைப்பற்றியது.
கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் ஸ்பெயின் வீராங்கனைகளும், அந்த நாட்டைச் சேர்ந்தவர்களும் மகிழ்ந்தனர். ஆனால், வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் ஓல்கா கார்மோனாவுக்கு இந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள்தான் நீடித்தது. அவர் தனது இந்த வெற்றியை முழுமையாக அனுபவிக்கும் முன்பே, முன்னாள் கால்பந்து வீரரான அவரது தந்தை இறந்த செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. இறுதிப் போட்டிக்கு முன்னரே, ஓல்கா கார்மோனாவின் தந்தை இறந்துவிட்டார். ஆனாலும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், கார்மோனாவின் தந்தை மறைவுச் செய்தியை அவருக்குத் தெரியப்படுத்தினால், அவரால் போட்டியில் கவனம் செலுத்த முடியாமல் போகும் எனக் கருதி அவருக்குத் தெரிவிக்காமல் இருந்தனர்.
உலகக் கோப்பையை வென்றதற்குப் பிறகும் கார்மோனா தாம் வெளியிட்ட பதிவில், ‘இன்றிரவு நீங்கள் என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் என்னை பற்றி பெருமைப்படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நிம்மதியாக இருங்கள் அப்பா’ என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பையை வென்ற களிப்பு ஒருபுறம் இருந்தாலும், கார்மோனாவின் தந்தை மறைவுச் செய்தி, அந்நாட்டு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.