ஆப்கானிடம் இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்வி!

Afghanistan beat England
Afghanistan beat England

உலகக் கோப்பை போட்டித் தொடரில் தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை, ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடையச் செய்தது. உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு இது இரண்டாவது வெற்றியாகும். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கல் இங்கிலாந்து வீரர்களை நிலைகுலையச் செய்து விக்கெட்டுகளை அள்ளிச் சென்றனர்.

முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களிலேயே 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெளியேறியது.

ரஷீத்கான், முஜிபுர் ரஹ்மான் தலா மூன்று விக்கெட்டுகளையும், முகமது நபி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆப்கானிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இங்கிலாந்து அணி தொடக்கத்திலேயே தள்ளாடியது. ஜானி பாரிஸ்டோவ் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஃபஸல்ஹக் பரூக்கி வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி அவுட்டானார். ஜோ ரூட் 11 ரன்களில் முஜிப் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். ஹாரி ப்ரூக் மட்டும் துணிச்சலுடன் நின்று ஆடி 66 ரன்கள் எடுத்தார்.

தாவித் மலான் பொறுமையாக ஆடி 32 ரன்கள் எடுத்தபோது முகமது நபி பந்துவீச்சில் அவுட்டானார். நவீன் உல் ஹக் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கேப்டன் பட்லர் 9 ரன்கள் வீழ்ந்தார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஆப்கானிஸ்தான் பல நிர்பந்தங்களை ஏற்படுத்திய போதிலும் இங்கிலாந்து அணியின் ப்ரூக், நின்று ஆடி 45 பந்துகளில் அரை சதம் எடுத்தார். எனினும் அவர் 66 ரன்களில் முஜிப் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆப்கான் பந்துவீச்சாளர் ரஷீத் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியைதை அடுத்து இங்கிலாந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முன்னதாக ஆப்கானிஸ்தான் 284 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக ஆடி 80 ரன்கள் எடுத்தார். அவரும் இப்ராஹிம் ஜர்தானும் கூட்டாக 114 ரன்கள் எடுத்தனர். எனினும் ஜர்தான் 28 ரன்களில், ஆதில் ரஷீத் பந்தில் வீழ்ந்தார். ரஹ்மத் ஷா 3 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். எனினும் ஆப்கன் விக்கெட்டுகள் அவ்வப்போது வீழ்ந்தன. அலிகில் மட்டும் நின்று ஆடி 58 ரன்கள் குவித்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் 284 ரன்களில் ஆட்டமிழந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com