ஆப்கானிஸ்தான் அபார வெற்றி! பாகிஸ்தானுக்கு 3-வது தோல்வி!

afghanistan defeat pakistan
afghanistan defeat pakistan

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. சென்னையில் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது.

ஒருநாள் போட்டியில் இதுவரை 8 முறை பாகிஸ்தானை எதிர்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் முதல் முறையாக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முன்னதாக தில்லியில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான், நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அதிர்ச்சித் தோல்வி அளித்தது.

இதற்கு முன்னர் நடைபெற்ற 7 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் நால்வர் நன்கு ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்திய போதிலும் வெற்றிபெற முடியவில்லை.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் நான்கு புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தைப் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் தற்போது பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. எனினும் ஏற்கெனவே மூன்று தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான், அடுத்து தென்னாப்பிரிக்காவுடன் நடைபெறவுள்ள போட்டியிலும் தோல்வியைத் தழுவுமானால், நாக்அவுட் அளவிலேயே வெளியேற வேண்டியிருக்கும்.

திங்கள்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 283 ரன்கள் எடுத்தால்தான் வெற்றி என்ற நிலையில் தொடக்கத்திலிருந்தே நின்று ஆடி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 286 ரன்கள் குவித்து வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்மாஸ் மற்றும் இப்ராகிம் ஜர்தான் இருவரும் தொடக்க நிலையிலேயே நின்று ஆடி 130 ரன்கள் சேர்த்தனர். முதல் 20 ஓவர்களில் பாகிஸ்தான் பந்துவீச்சும் சுமாராகத்தான் இருந்தது. மேலும் பாகிஸ்தான் வீரர்களின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் பவுண்டரியை நோக்கி அடித்த பந்துகளை தடுத்து நிறுத்த பாகிஸ்தான் வீரர்கள் பலமுறை தவறிவிட்டனர்.

22-வது ஓவரின் ஷாஹின் ஷா அஃபிரிடி பந்தில் குர்பாஸ் 65 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து ரஹ்மத், ஜர்தானுடன் இணைந்து ரன்களை குவிக்கத் தொடங்கினார். 87 ரன்கள் எடுத்த நிலையில் ஹஸன் அலிபந்தில் அவுட்டாகி ஜர்தான் வெளியேறினார். பின்னர் ஆடவந்த கேப்டன் ஹஷ்மத்துல்லாவுடன் சேர்ந்து ரஹ்மத் மூன்றாவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தார். 50 ஓவர்களுக்கு 6 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றி இலக்கை எட்டியது.

முன்னதாக பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆஸம் அரை சதம் அடித்தார். தொடக்க ஆட்டக்காரர் ஷபீக் 58 ரன்கள் எடுத்தார். இப்திகார் அகமது அதிரடியாக ஆடி 40 ரன்கள் குவித்தார். இதேபோல ஷாதாப் கானும் 40 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com