
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி முதல் சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. முன்னதாக. முதல் போட்டியில் வங்கதேசத்திடம் தோற்ற ஆப்கானிஸ்தான் அணி, சூப்பர் 4 தகுதிச் சுற்றுக்குச் செல்ல நல்ல ரன் ரேட்டில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
அதையடுத்து, டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 291 ரன்கள் குவித்தது. அதையடுத்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.1 ஓவர்களில் இந்த இலக்கை எட்டினால் சூப்பர் 4 தகுதி சுற்றுக்குச் செல்ல முடியும் என்ற நிலையில் களமிறங்கியது. தொடக்கம் முதலே ஆப்கானிஸ்தான் அணி அதிரடி காட்டி விளையாடியது. ரன்கள் வேகமாக சேர்ந்தாலும், மறுபுறம் விக்கெட்கள் வீழ்ந்தவண்ணம் இருந்தன.
இறுதியில், ரஷீத் கான் தனது அதிரடி விளையாட்டை ஆரம்பிக்க, மேலே கூறிய கணக்கின்படி 38வது ஓவரின் முதல் பந்தில் 3 ரன்கள் ஆப்கானிஸ்தான் அணிக்குத் தேவைப்பட்டன. அந்தப் பந்தில் முஜீப் உர் ரஹ்மான் ஆட்டமிழக்க, ரஷீத் கான் மிக அருகில் வந்தும் போட்டியை வெல்ல முடியாத விரக்தியில் இருந்தார். ஆனால், ஆப்கானிஸ்தான் அணிக்கு இன்னொரு வாய்ப்பும் இருந்ததை அவர் அறியவில்லை. நிர்ணயித்த இலக்கை விட அதிக ரன்கள் அடிப்பதன் மூலமாகவும் நெட் ரன் ரேட்டைச் சற்று அதிகரிக்க முடியும். அதன்படி, 37.2 ஓவரில் – 293 ரன்கள், 37.3 ஓவரில் – 294 ரன்கள், 37.5 ஓவரில் – 295 ரன்கள், 38 ஓவரில் – 296 ரன்கள், 38.1 ஓவரில் – 297 ரன்கள் இவற்றில் எந்த ஸ்கோர் எடுத்து இருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணியால் அதிக ரன் ரேட்டுடன் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்க முடியும்.
அதன்படி, கடைசி பேட்ஸ்மேனாக ஆடவந்த ஃபசல்ஹக் ஃபரூக்கி தனக்குக் கிடைத்த அந்தப் பந்தில் பவுண்டரி அடித்திருந்தாலே ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கலாம். அல்லது அவர் சிங்கிள் எடுத்து, அடுத்த பந்துகளில் ரஷீத் கான் பவுண்டரியோ அல்லது சிக்ஸரோ அடிக்க முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால், இதுபற்றி எதுவும் ஆப்கானிஸ்தான் அணிக்கு தெரியாமல் போனது. ஃபசல்ஹக் ஃபரூக்கி இரண்டு பந்துகளைத் தடுத்து ஆடி, மூன்றாவது பந்தில் LBW ஆனார். மறுமுனையில் 16 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ரஷீத் கான் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்தது ஆப்கானிஸ்தான் அணி.
போட்டி முடிந்த பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜொனாதன் டிராட், "37.1 ஓவர்களில் இலக்கை எட்ட வேண்டும் என்பது மட்டும்தான் எங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால், 38.1 ஓவர்கள் வரை இருந்த மற்ற கணக்குகள் பற்றி எங்களுக்கு எதுவும் சொல்லப்படவில்லை" எனக் கூறினார். முக்கியமான விஷயங்களுக்கு நடுவர்களை நம்பி இருப்பது இயல்புதான். ஆனால், ‘நெட் ரன் ரேட் என்பது மிகவும் எளிதில் கணக்கிடக்கூடியது. அதை அந்தந்த அணிகளே கணக்கிட்டுக்கொள்ள முடியும். ஆனால், அதைக்கூட ஆப்கானிஸ்தான் அணியினரால் கணக்கிட முடியவில்லை’ என ரசிகர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.