அரசுப் பேருந்தில் பயணம் செய்த பிரபல கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது காங்கிரஸ் கட்சி. தேர்தலில் மக்களுக்கான வாக்குறுதியாக தாங்கள் ஆட்சி அமைத்தால் மகளிர் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி அந்தத் தேர்தல் வாக்குதியை சமீபத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது. மகளிருக்கான இந்த இலவச அரசுப் பேருந்து பயணத் திட்டம் தனியார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை கார் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இலவசப் பேருந்து திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தி அதற்கான இழப்பீட்டுத் தொகையை அரசே வழங்க வேண்டும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத் தலைநகரான பெங்களூருவில் இன்று தனியார் வாகனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நேற்று நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை தனியார் பேருந்து நிறுவனங்கங் மற்றும் ஆட்டோக்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே அரசு பேருந்தில் தான் பயணித்த புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு தனது கருத்துயும் பதிவிட்டு இருக்கிறார். இது குறித்து அவர், ‘விமான நிலையத்திலிருந்து இன்று வீடு திரும்பும் பெங்களூரு அரசுப் பேருந்து பயணம்’ என்று தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த 1990ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை இந்திய அணியில் இடம் பெற்று 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகளும், 271 ஒரு நாள் போட்டிகளில் 337 விக்கெட்டுகளும் கைப்பற்றியவர் அனில் கும்ப்ளே என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே அரசுப் பேருந்தில் வீட்டுக்குச் செல்லும் புகைப்படம் தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.