ஆசிய கோப்பை: நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா!

India vs Nepal
India vs Nepal

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. எனினும் இந்த போட்டி வரிசையில் இந்தியா, பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் 10 ஆம் தேதி நடைபெறும்.

நேபாள அணியை வெல்வது ஒன்றும் இந்திய அணிக்கு அவ்வளவு எளிதாக இல்லை. பிரபலமான இந்திய அணியை நேபாளம் எதிர்கொள்வது இது முதல் முறையாக இருந்த போதிலும் அந்த அணியினர் துணிச்சலுடன் ஆடி 230 ரன்கள் எடுத்தனர். அதே நேரத்தில் நேபாளத்தைச் சேர்ந்த பந்துவீச்சாளர்கள் திறமையாக பந்துவீசி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தினர்.

ரோகித் சர்மா, ஒருநாள் சர்வதேச போட்டியில் தனது 49 வது அரைசதத்தை எடுத்து, விராட் கோலியின் 1046 ரன்கள் சாதனையை முறியடித்து ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த பெருமை பெற்றார்.

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்  இந்திய அணியின் சுப்மன் கில், கேப்டன் ரோகித் சர்மா இருவரும் ஆட்டத்தை தொடங்கினர்.  இந்திய அணி, 2.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிடதால் ஆட்டம் தடைபட்டது. இதன்பின் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, இந்திய அணி 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து  ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆட்டத்தை கையாண்டனர்.    இருவரும் அடுத்தடுத்தது அரைசதம் கடந்தனர். இதனால், இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் 74 ரன்களும், கில் 67 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. நேபாள அணிக்காக குஷால் புர்டெல் மற்றும் ஆசிஃப் ஷேக் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 65  ரன்கள் சேர்த்தனர். ஆட்டத்தின் தொடக்கத்தில் அவர்கள் இருவரும் 3 முறை பந்தை தூக்கியடித்து கேட்ச் கொடுத்தனர். ஆனால், இந்திய அணி வீர்ர்கள் அதை கேட்ச் பிடிக்காமல் நழுவ விட்டனர். இருப்பினும் ஷர்துல் தாக்குர் அவர்களது கூட்டணியை தகர்த்தார். பின்னர் தொடர்ச்சியாக 3 விக்கெட்களை ஜடேஜா கைப்பற்றினார். அதன் பிறகு சீரான இடைவெளியில் நேபாளம் விக்கெட்டை இழந்தது. மழை குறுக்கீடு இருந்த காரணத்தால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது.

நேபாள அணி, 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக ஆசிஃப் ஷேக் 58 ரன்கள், சோம்பால் கமி 48 ரன்கள்,  குஷால் புர்டெல் 38 ரன்கள், திபேந்திரா 29 ரன்கள் மற்றும் குல்ஷன் ஜா 23 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர்.  சந்தீப் லமிச்சானே, ரன் அவுட்டானார்.

.இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். சிராஜ் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ஷமி, ஹர்திக் மற்றும் ஷர்துல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com