ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி!

Asia Cup IND vs PAK
Asia Cup IND vs PAK

சியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 4 அணிகளாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் தேர்வு பெற்று உள்ளன. இந்த சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து இந்திய நேற்று முன்தினம் மாலை விளையாடியது. முன்னதாக, இந்தப்  போட்டி மட்டும் மழையால் பாதிக்கப்பட்டால் மறு நாளும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே நேற்று முன்தினம் ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

நேற்று முன்தினம் 24.1 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது விராட் கோலி 8 ரன்களுடனும், ராகுல் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அதைத் தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் விட்ட இடத்திலிருந்து ஆட்டம் தொடங்கியது. விராட் கோலியும், கே.எல்.ராகுலும் தங்களது வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி நேற்று ஆடத் தொடங்கினர். இதனால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மிகவும் திணறினர்.

நேற்றைய ஆட்ட நேர முடிவில்  இந்தியா 356 ரன்களை குவித்தது. இதில் கே.எல். ராகுல் 106 பந்தில் 111 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். இதில்,12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். ஒரு நாள் போட்டியில் கே.எல்.ராகுலின் மிகச் சிறந்த  ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து, விராட் கோலியும் தனது 47வது ஒரு நாள் போட்டி சதத்தை பதிவு செய்தார். அதிரடியாக விளையாடிய இவர் 94 பந்துகளை சந்தித்து 122 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று சிக்சர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். அதுமட்டுமின்றி, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 13,000 ரன்களைக் கடந்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையும் விராட் கோலி படைத்தார். இருவரும் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் விளையாடி அசத்தினர்.

அதைத் தொடர்ந்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கோடு களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது. ஆனால், இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்கத் திணறிய பாகிஸ்தான் வீரர்கள் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து களத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் 47 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறத் தொடங்கியது. குறிப்பாக, குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சு பாகிஸ்தான் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. இவர் 8 ஓவர்கள் வீசி 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பாகிஸ்தான் அணியின் 8வது விக்கெட் வீழ்ந்ததும் அந்த அணி தங்களது ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தது. இதனால் அந்த அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. இதனால் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் இருவருக்கும் ஏற்பட்ட காயத்தால் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சார்பில், பாண்டியா, பும்ரா, ஷர்துல் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருதை 122 ரன்கள் எடுத்த விராட் கோலி பெற்றார். இதன் மூலம் சூப்பர் 4  பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது இந்தியா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com