
ஆசியக் கோப்பை 2023 சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இலங்கை – இந்தியா இடையிலான சூப்பர் 4 போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார்கள். ஆரம்பத்தில் கில் தனது ஆட்டத்தில் நிதானத்தை கடைபிடிக்க, மறுபுறம் ரோஹித் சர்மா கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பந்த பவுண்டரிக்கு அடித்துக்கொண்டு இருந்தார். இந்த நிதான ஆட்டத்தினால் இந்திய அணி 10 ஓவர் வரை விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் என்ற நல்ல நிலையை எட்டியது.
அதனையடுத்து கில் பந்துகளை அடித்து ஆட நினைக்க, தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரையடுத்து ஆட வந்த விராட் கோலி 2 ரன்கள் எடுத்து அவுட் ஆகி தனது விக்கெட்டை பறி கொடுத்தார். அவரைத் தொடர்ந்து, 53 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மாவும் தனது விக்கெட்டை இழந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன், கே.எல்.ராகுல் ஓரளவுக்குத் தாக்குப் பிடித்தனர். இடையில் சிறிது நேரம் மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி சார்பாக துனித் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதேபோல், அசலங்காவும் தனது பங்குக்கு 4 நான்கு விக்கெட்டுகளை எடுத்தார்.
இலங்கை அணி 214 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சுலபமான இலக்கோடு அடுத்து ஆடத் தயாரானது. ஆனால், இந்திய அணி பந்து வீச்சை சமாளித்து ரன்கள் எடுப்பது இலங்கை அணிக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. அதனால் ஆட்டம் தொடங்கியது முதலே இலங்கை அணி தடுமாற்றமாகவே ஆடியது. ஒரு கட்டத்தில் இலங்கை அணி 25 ரன்கள் எடுத்திருந்தபோது 3 விக்கெட்டுகளை இழந்து நின்றது. அதனையடுத்து சீரான இடைவெளியில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தது. ஆனாலும், இலங்கை அணியின் தனஞ்செயா, துனித் கூட்டணி இந்திய பந்து வீச்சாளர்களுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தனர். இவர்களின் ஆட்டம் ஒருகட்டத்தில் இலங்கை அணியே வெற்றி பெறும் என்றுகூட நினைக்க வைத்தது. ஆனால், அந்த எண்ணத்தை தவிடுபொடி ஆக்கிவிட்டது ஜடேஜாவின் பந்து வீச்சு.
இறுதியில், இலங்கை அணி 41.3 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 172 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, ஆசியக் கோப்பை 2023 இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றிருக்கிறது.