ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை!
ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை. இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை நழுவவிட்டது பாகிஸ்தான். இதையடுத்து இலங்கை, இந்தியா இடையிலான இறுதிப்போட்டி வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தகுதியான ஆட்டக்காரர்கள் அணியில் அதிகம் இல்லாததாலும், அணியில் இடம்பெற்றுள்ளவர்கள் ஃபார்மில் இல்லாத நிலையிலும் பாகிஸ்தான் அணி இறுதிச்சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை நழுவவிட்டது. சூப்பர் 4 போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், அடுத்து இந்தியா மற்றும் இலங்கையுடனான போட்டியில் தோல்வியைத் தழுவியது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி கண்டது. ஆனால், இலங்கைக்கு எதிரான போட்டியில் தனது முழு திறனையும் வெளிப்படுத்தி ஆடிய போதிலும் பாகிஸ்தான் வெற்றிபெற முடியவில்லை.
பாகிஸ்தான் அணியில் ஐந்து வீரர்கள் மாற்றப்பட்டனர். இமால் உல் ஹக் மற்றும் செளத் ஷகீல் இருவரும் உடல்நிலை காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக பக்கர் ஜமான் மற்றும் அப்துல்லா ஷபீக் இருவருக்கும் அணியில் இடம் கிடைத்தது. ஹாரிஸ் ரவூப் மற்றும் நஸீம் ஷா காயமடைந்ததன் காரணமாக ஜமான் கானுக்கு வாய்ப்பு கிடைத்தது.
பக்கர் ஜமான் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. பிரமோத் மதுஷன் வீசியபந்தில் அவர் அவுட்டானார். எனினும் ஷபீக் நின்று ஆடி 62 பந்துகளை சந்தித்து 52 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும், மூன்று பவுண்டரிகளும் அடங்கும்.
கேப்டன் பாபர் ஆஸம் நன்றாக விளையாடிய போதிலும் 29 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டம்பு அவுட்டாகி வெளியேறினார். இந்த நிலையில் பாகிஸ்தான் 27.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
பின்னர் முகமது ரிஸ்வான், இப்திகார் அகமது இருவரும் கூட்டாக 6 வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தனர். ரிஸ்வான் 86 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும். பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்ளஸ் வீவிஸ் முறையில் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.
இப்திகார் 40 பந்துகளை சந்தித்து 47 ரன்கள் எடுத்து அணிக்கு உதவினார். இலங்கை பந்துவீச்சாளர் மதீஸ பதிரானா 65 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலங்கை அணி விளையாடியது. குசால் பெரைரா எடுத்த எடுப்பிலேயே பந்தை பவுண்டரிக்கு அனுப்பி தனது கணக்கை தொடங்கினார். ஆனால், ஷாதாப்கான் வீசிய பந்தில் விரைவிலேயே அவர் அவுட்டானார். அதன்பிறகு குசால் மெண்டிஸ் மற்றும் பாதும் நிஸங்கா இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தனர்.
இந்த நிலையில் நிஸங்கா 29 ரன்களில் ஷாதாப் வீசிய பந்தில் அவுட்டானார். அதன் பிறகும் ஆட வந்த சதீர சமரவிக்ரம, மெண்டிஸுடன் இணைந்து கூட்டாக 100 ரன்கள் எடுத்தனர்.
சமரவிக்ரம 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இப்திகார் வீசிய பந்தில் அவுட்டானார். சதம் எடுத்துவிட வேண்டும் என்ற துடிப்புடன் இருந்த நிலையில் மெண்டிஸ் 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இப்திகார் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். மெண்டிஸ் ஒரு சிக்ஸரும், 8 பவுண்டரிகளும் அடித்தார்.
அடுத்து விளையாடிய தாஸன் ஷனகா விரைவிலேயே அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். இறுதியில் அஸலங்கா மற்றும் தனஞ்சய டீ சில்வா இருவரும் இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
ஷாஹீன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டம் பரப்பரப்பாகச் சென்றது. ஜமான்கான் முனைப்புடன் பந்துவீசியிலும் எந்த பலனும் ஏற்படவில்லை. இரண்டு பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் சரித் அஸலங்கா, பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். அடுத்து வீசிய பந்தை அடித்து விளையாடி வெற்றி இலக்கை எட்டினார்.