ஆசிய விளையாட்டுப் போட்டி: 50 பதக்கங்களைக் குவித்த இந்தியா!

ஆசிய விளையாட்டுப் போட்டி:
50 பதக்கங்களைக் குவித்த இந்தியா!

சீனாவில் ஹாங்சு நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இதுவரை 50க்கும் மேலான பதக்கங்களை வென்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் மட்டும் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களை தட்டிச் சென்றுள்ளது.

3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாபிள் ஆசிய விளையாட்டு போட்டியில் சாதனையை முறியடித்ததுடன், பந்தயத் தொலைவை 8 நிமிடம், 19.50 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இதற்கு முன் 2018ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கென்ய வீரர் 8 நிமிடம், 22.79 விநாடிகளில் கடந்ததுதான் சாதனையாக இருந்தது.

குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் தாஜிந்தர் பால் சிங் 20.36 மீட்டர் தொலைவு எறிந்து தங்கம் வென்றார்.

பாட்மின்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணியினர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் இந்தியாவின் ஜோதி யர்ராஜி 12.91 விநாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் சீனாவின் யூவி லின் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

குத்துச்சண்டை போட்டியில் மகளிர் 50 கிலோ எடை பிரிவில் நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவின் நிகத் ஜரீன் தாய்லாந்தின் ரக்ஸத் சுதாமத்திடம் தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது.

ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீர்ர்கள் அஜய் குமார் சரோஜ், பந்தய தூரத்தை 3 நிமிடம் 38.94 விநாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கமும், ஜின்ஸன் ஜான்சன் 3 நிமிடம் 39.74 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

1500 மீட்டர் ஓட்டத்தில் மகளிர் பிரிவில் ஹர்மிலான் பைன்ஸ் பந்தய தூரத்தை 4 நிமிடங்கள் 12.74 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஹர்மிலான் தந்தை அமன்தீப் பைன்ஸ் தெற்காசிய போட்டிகளில் 1500 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்றவர். தாய் மாதுரி சக்சேனா 2002 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.19 மீட்டர் தொலைவு தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவின் வாங் ஜியானன் 8.22 மீட்டர் தாண்டி தங்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரரான ஜெஸ்வின் ஆல்டிரின் 8வது இடத்தையே பெற முடிந்தது.

வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சீமா புனியா 58.62 மீட்டர் தொலைவுக்கு வட்டு எறிந்து வெண்கலம் வென்றார். சீனாவின் ஃபெங் பின் (67.93 மீ.) தங்கமும், ஜியாங் ஜுஹிசாவ் (61.04 மீ.) வெள்ளியும் வென்றனர்.

மகளிருக்கான ஹெப்டாத்லான் போட்டியில் இந்தியாவின் அகஸரா 5712 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் 5708 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் டிராப் பிரிவில் கினான் செனாய் வெண்கலம் வென்றார். இதே பிரிவில் குழு போட்டியில் கியான செனாய், ஜோராவர் சிங் சாந்து மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் தங்கம் வென்றனர்.

மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் குழு போட்டியில் இந்தியாவின் மனீஷா கீர், ப்ரீத்தி ரஜக் மற்றும் ராஜேஸ்வரி குமார் 337 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

கோஃல்ப் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com