ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்!

India won gold medal in shooting
India won gold medal in shooting

சீனாவின் ஹாங்ஸு நகரில் நடைபெற்றுவரும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டாவது நாளான திங்கள்கிழமை துப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கம் வென்றது.

இது தவிர இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரும் இலங்கை அணியை வென்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளனர். இதையடுத்து பதக்கப்பட்டியலில் இந்தியா 2 தங்கப்பதக்கங்களுடன் 6-வது இடத்தில் உள்ளது.

எனினும் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் முன்னிலை ஆட்டக்காரரான ரோஹன் போபண்ணா-யுகி பாம்பிரி ஜோடி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

துப்பாக்கி சுடுதல்: ஆடவர் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய அணியினர் தங்கம் வென்றனர். ருத்ராங்ஷ் பாலாசாகிப் பாடீல், திவ்யான்ஷ் சிங் பன்பவர் மற்றும் அய்ஷ்வரி பிரதாப் சிங் தோமர், குழு பிரிவில் தங்கம் வென்றது மட்டுமின்றி உலக சாதனையையும் முறியடித்துள்ளனர்.

ஆடவர் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் தனிநபர் பிரிவு போட்டியில் அய்ஷ்வரி பிரதாப் சிங் தோமர் வெண்கலம் வென்றுள்ளார். துப்பாக்கிசுடுதலில் இந்தியாவுக்கு மொத்தம் நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இந்திய ஆடவர் ராபிட் ஃபயர் பிஸ்டல் அணியினர் ஆதர்ஷ் சிங், அனிஷ் பன்வாலே மற்றும் விஜய்வீர் சித்து 25 மீ. ராபிட் ஃபயர் பிரிவு போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

படகுப் போட்டி: படகுப் போட்டியில் இந்தியாவுக்கு மொத்தம் 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன ஆடவர் குவாட்ராபுள் ஸ்கல்ஸ் போட்டியில் திங்கள்கிழமை இந்தியா வெண்கலப் பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் மகளிர் அணியினர் கடைசி இடத்தையே பிடித்தனர்.

கிரிக்கெட்: ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டி இறுதியில் இந்திய மகளிர் அணி, இலங்கை அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இது இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது தங்கப்பதக்கமாகும்.

முதலில் களம் இறங்கிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டென்னிஸ்: ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா- யுகி பாம்பிரி ஜோடி, உஸ்பெகிஸ்தானின் செர்ஜி ஃபோமின்-குமோயுன் சுல்தானோவ் ஜோடியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

மகளிர் இரட்டையர் போட்டியில் முதல் சுற்றில், இந்தியாவின் போஸ்லே-கர்மன் தண்டி ஜோடி 6-4, 6-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ஜானெல் ருஸ்தேமோவா மற்றும் அருஜான் சகன்டிகோவா ஜோடியை வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com