ஆசிய விளையாட்டு: வெள்ளி வென்ற பாருல் சவுத்ரி!

Parul Chaudhary
Parul Chaudhary

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 9 வது நாள் இறுதியில் இந்தியா மொத்தம் 60 பதக்கங்களை வென்றுள்ளது. திங்கள்கிழமை மட்டும் இந்திய 7 பதக்கங்களை கைப்பற்றியது.

தடகளப் போட்டிகளில் இந்தியா 3 பதக்கங்களைப் பெற்றது சிறப்பு அம்சமாகும். ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி முதல் முறையாக பதக்கம் வென்றுள்ளது.

3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில், மகளிர் பிரிவில், இந்தியாவின் பாருல் சவுத்ரி 9 நிமிடம், 27.63 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான பிரீத்தி 9 நிமிடம் 43.32 விநாடிகளில் 3-வதாக வந்து வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் பஹ்ரைன் வீராங்கனை தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

மகளிர் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் அன்சி சோஜன் 6.63 மீட்டர் தாண்டி 2 ஆம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார். சீனா மற்றும் ஹாங்காங் வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெண்கலம் வென்றனர். இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை ஷாய்லி சிங் 6.48 மீட்டர் தொலைவு தாண்டி 5 ஆம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

4 x 400 மீட்டர் கலப்பு ரிலே போட்டியில் இந்தியாவின் முகமது அஜ்மல், வித்யா ராம்ராஜ், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன் அடங்கிய அணி 3 நிமிடம் 14.34 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்த போட்டியில் பஹ்ரைன் அணி தங்கத்தையும், கஜகஸ்தான் வெண்கலத்தையும் தட்டிச் சென்றது.

ஸ்பீடு ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலே போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஆர்யன்பால் சிங், ஆனந்தகுமார், சித்தார்த் ராகுல், விக்ரம் ராஜேந்திரா ஆகியோர் அடங்கிய அணி 4 நிமிடம் 10.12 விநாடிகளில் 3-வதாக வந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. சீன தைபே மற்றும் தென்கொரிய அணிகள் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றன.

இதே போட்டியில், மகளிர் பிரிவில் சஞ்சனா பதுலா, கார்த்திகா ஜெகதீஸ்வரன், ஹீரால் சாது, ஆர்த்தி கஸ்தூரி ராஜ் ஆகியோர் 4 நிமிடம், 34.86 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினர். இந்த பிரிவிலும் சீன தைபே, தென்கொரிய அணிகள் தங்கம் மற்றும் வெள்ளி வென்றன.

டேபிள் டென்னிஸ் போட்டிகள் திங்கள்கிழமை நிறைவடைந்தன. இந்த போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, அஹிகா முகர்ஜி ஜோடி வெண்கலம் வென்றது.

அரையிறுதிப் போட்டியில் இந்த ஜோடி 3க்கு 4 என வடகொரியாவின் சுயோங்சா, சுகோயாங் ஜோடியிடம் தோற்றபோதும் பதக்கம் வென்றது.

ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்தியா, குழுகளுக்கான சுற்றில் ஏ பிரிவில் 12க்கு 0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் மன்தீப் சிங் இருவரும் தலா 3 கோல்கள் போட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com