ஆசிய விளையாட்டு: முதல் நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கம்!
ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இந்தியாவுக்கு 3 வெள்ளிப்பதக்கம் உள்பட 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
சீனாவின் ஹாங்ஸு நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகிறது.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீ. ஏர் ரைஃபிள் அணி போட்டியில் இந்திய அணி 1886 புள்ளிகள் பெற்று 2-வதாக வந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. இது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமாகும்.
சீனா (1896 புள்ளிகள்) தங்கப் பதக்கத்தையும், மங்கோலியா (1880 புள்ளிகள்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
அடுத்து நடைபெற்ற தனிநபர் போட்டியில் ஜூனியர் உலக சாம்பியனான 19 வயது ரமிதா 230.1 புள்ளிகளுடன் 3-வது இடம்பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இது தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமாகும். இந்த போட்டியில் மெஹுலி 4-வது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
ஆடவர்களுக்கான லைட் வெயிட் டபுள் ஸ்கல்ஸ் துடுப்புப் படகு போட்டியில் பந்தய தூரத்தை 6 நிமிடம், 28.18 விநாடிகளில் கடந்த இந்தியாவின் அர்ஜுன் லால் ஜாத், அரவிந்த் சிங் ஜோடி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
ஆடவர்களுக்கான காக்ஸ்டு-8 பிரிவு துடுப்புப் படகு போட்டியில் நீரஜ், நரேஷ், நிதிஷ்குமார், சண்ஜித் சிங், ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித்குமார், ஆஷிஷ், தனஞ்ஜய் பாண்டே ஆகியோர் அடங்கிய இந்திய அணி இலக்கை 5 நிமிடம், 43.01 விநாடிகளில் கடந்து 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது.
ஆடவர் காக்ஸ்லெஸ் இரட்டையர் பிரிவு துடுப்புப் படகு போட்டியில் பந்தய தூரத்தை 6 நிமிடம், 50.41 விநாடிகளில் கடந்த இந்தியாவின் பாபுலால் யாதவ், லேக் ராம் ஜோடி 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இதையடுத்து முதல் நாளில் இந்தியாவுக்கு 3 வெள்ளி, 2 வெண்கலம் உள்பட 5 பதக்கங்கள்கிடைத்தன.
பதக்கப்பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. சீனா 20 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கத்துடன் முதலிடத்திலும், தென்கொரியா 5 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்திலும் ஜப்பான் 2 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
முன்னதாக மகளிர் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா 52 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை (51 ரன்கள்) வீழ்த்தியது.
ஹாக்கி ஏ பிரிவு லீக் போட்டியில் இந்தியா உஸ்பெகிஸ்தானை 16-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
கால்பந்து லீக் போட்டியில் இந்தியா-மியன்மார் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவானது. எனினும் இந்தியா ஏ பிரிவில் 4 புள்ளிகளுடன் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

