Djokovic vs Alcaraz
Djokovic vs Alcaraz

அல்கராஸை வீழ்த்தி பட்டம் வென்றார் ஜோகோவிச்!

அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உலகின் நெம்பர் 1 வீரரான ஸ்பெயின் நாட்டின் அல்கராஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்திய நேரப்படி, ஞாயிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதிச்சுற்றில் 2 ஆம் நிலை வீரரான ஜோகோவிச் 5-7, 7-6, (9/7), 7-6 (7/4) என்ற செட்களில், விம்பிள்டன் நடப்புச் சாம்பியன் அல்கராஸை போராடி வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் கடந்த மாதம் கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் இறுதிச்சுற்றில் அல்கராஸிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஜோகோவிச். கரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக 2 ஆண்டுகளாக விளையாடாத ஜோகோவிச்சுக்கு அந்த மண்ணில் இதுவே முதல் போட்டியாகும்.

வெற்றிக்குப்பின் பேசிய ஜோகோவிச், இதுவரை “நான் விளையாடிய போட்டிகளிலேயே எனக்கு மிகவும் உற்சாகம் அளித்த போட்டிகளில் இதுவும் ஒன்றாகும், இதை ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டி வெற்றியாக நான் கருதுகிறேன். எனது வாழ்வில் மிகவும் கடினமான போட்டியாகவும் இதை நினைக்கிறேன்.

அல்கராஸ் இதை சாதாரணமாக நினைக்கமாட்டார். அவரிடம் எனக்கு பிடித்ததே அவரது போராட்ட குணம்தான். அவரை மீண்டும் யு.எஸ். ஓபனில் சந்திப்பேன்” என்றார்.

ஜோகோவிச்சிடம் பட்டத்தை இழந்த அல்கராஸ், டென்னிஸ் விளையாட்டில்  எப்போதுமே சிறந்தவராக கருதப்படும் ஒருவரை தோல்வியின் விளிம்புக்கு கொண்டு சென்றுள்ளேன். கடைசிவரை வெற்றிக்காக போராடினேன். ஆனால், தோல்வி அடைந்துவிட்டேன். ஓரளவு நன்றாக ஆடி ரசிகர்களை திருப்திபடுத்தியதில் எனக்கு மகிழ்ச்சிதான். நான் மீண்டு வருவேன் என்றார் அல்காரஸ்.

இந்த போட்டியில் அல்காரஸ்  தோல்வியடைந்தாலும் உலகின் நெம்பர் 1 வீரராகவே யு.எஸ். ஓபன் போட்டியில் களம் காண்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சின்சினாட்டி மாஸ்டர்ஸில் 3-வது முறையாக கோப்பை வென்றுள்ளார் ஜோகோவிச். தற்போது மாஸ்டர்ஸ் போட்டியில் ஒட்டுமொத்தமாக வென்றிருப்பது அவரது 39வது சாம்பியன் பட்டமாகும்.

ஜோகோவிச்-அல்கராஸ் இருவரும் இத்துடன் நான்கு முறை நேருக்கு நேர் சந்தித்துள்ள நிலையில் இருவரும் 2 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com