
யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியை சந்திக்க நோவக் ஜோகோவிச் மற்றும் கார்லோஸ் அல்கராஸ் இருவரும் தயாராகி வருகிறார்கள்.
சமீபத்தில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் அல்கராஸ், ஜோகோவிச்சை அதிர்ச்சித் தோல்வி அடையச் செய்தது நினைவிருக்கும்.
கடந்த வாரம் சின்சினாட்டி எபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் நாட்டு வீர்ர் அல்கராஸை போராடி வென்று பழிதீர்த்துக் கொண்டார் ஜோகோவிச். இந்த நிலையில் அடுத்து வரும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியை இருவரும் எதிர்கொள்ள விருக்கின்றனர்.
36 வயதான ஜோகோவிச் நீண்ட காலத்துக்குப் பிறகு யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் களம் இறங்குகிறார். கோவிட் தொற்றுத் தடுப்புக்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ள மறுத்த்தால் அவர் கடந்த முறை போட்டியில் விளையாட முடியவில்லை.உலகின் 2 ஆம் நிலை ஆட்டக்காரரான ஜோகோவிச், வரும் திங்கள்கிழமை முதல் ஆட்டத்தில் பிரான்சின் அலெக்ஸாண்டர் முல்லவரை எதிர்கொள்கிறார்.
“அல்கராஸ் கடைசிவரை போராடுவதில் வல்லவர். அவரது துடிப்பான ஆட்டம் ரஃபேல் நடால் ஆட்டத்தை நினைவுபடுத்துகிறது” என்று ஜோகோவிச் தெரிவித்துள்ளார். இந்த முறை காயம் காரணமாக ரஃபேல் நடால் யு.எஸ்.ஓபன் போட்டியில் விளையாடவில்லை.
முதல் சுற்று ஆட்டத்தில் அல்கராஸ் ஜெர்மனியின் டோமினிக் கூப்பரை சந்திக்கிறார். “ஒவ்வொரு முறையும் நான் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறேன். அவர் என்னுடன் விளையாடும்போது ரஃபேல் நடாலுடன் ஆடுவது போல் உணர்கிறார். ஒரு திறமையான ஆட்டக்காரரை எதிர்கொள்வதில் மகிழ்ச்சிதான்” என்று அல்கராஸ் கூறினார்.
திங்கள்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ஜோகோவிச், நிச்சயம் முல்லரை வெற்றிகொள்வார் என்கின்ற போதிலும், உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் என்கிற பட்டத்தை மீட்டுவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
எனினும் ஸ்பெயின் வீர்ரான அல்கராஸும் தமது திறமையான ஆட்டத்தையும் தந்திர முறைகளை கையாண்டு யு.எஸ். ஓபன் பட்டத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்று துடிப்புடன் இருக்கிறார்.
இதனிடையே மகளிர் ஆட்டத்தில் அனைவரது கவனமும் 19 வயதான கோகோ காஃப் மீதுதான் உள்ளது. முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் அவர் இருக்கிறார். ஒருவேளை அவர் யு.எஸ். ஓபன் பட்டம் வென்றால் அந்த பட்டத்தை பெறும் ஐந்தாவது கறுப்பு இனப் பெண் என்கிற அந்தஸ்தை அவர் பெறுவார்.