23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துராந்த் கோப்பையை வென்றது மோகன் பகான்!
துராந்த் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணி, தனது எதிரியான ஈஸ்ட் பெங்கால் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் பகான் கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மதிப்புமிக்க இந்த போட்டியில் 17-வது வெற்றியை அந்த அணி பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் இரண்டு சூப்பர் அணிகளான மோகன் பகான் மற்றும் ஈஸ்ட் பெங்கால் இரண்டும் நேருக்கு நேர் மோதின. இரண்டு அணிகளும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஆடியதால் ஆட்டம் விறுவிறுப்பாகவே சென்றது.
எனினும் மோகன் பகான் அணியின் வீர்ர் திமித்ரி பெட்ராடோஸ்தான் ஆட்டத்தின் நாயகனாக இருந்தார். ஆட்டம் தொடங்கிய 61 வது நிமிடத்தில் அந்த அணியின் அனிரூத், சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் அணி வீர்ர்கள் எண்ணிக்கை 10 ஆக குறைந்த போதிலும், 71 வது நிமிடத்தில் திமித்ரி, பந்தை அருமையாக கடத்திச் சென்று ஒரு கோல் போட்டார். ஈஸ்ட் பெங்கால் அணிக்கு கோல்போட வாய்ப்புகள் கிடைத்தும் அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மோகன் பகான் அணி பயன்படுத்திக் கொண்டு ஒரு கோல் போட்டு வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டது.
ஈஸ்ட் பெங்கால் அணி சிறப்பாக விளையாடிய போதிலும், வெற்றியை உறுதிசெய்ய தவறிவிட்டனர். துராந்த் கோப்பையில் இதுவரை 16 முறை பட்டம் வென்று ஈஸ்ட் பெங்கால் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த முறை துராந்த் கோப்பை போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. இது அதற்கு முந்தை ஆண்டைவிட அதிகமாகும்.
இந்த போட்டி கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கியது. இறுதிப் போட்டியில் தனது பரம எதிரியான ஈஸ்ட் பெங்கால் அணியை மோகன் பகான் வென்றது. இதற்கு முன் 2000 ஆம் ஆண்டில் மோகன் பகான் துராந்த் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
2004, 2009 மற்றும் 2019 இல் மோகன் பகான் இறுதிச்சுற்றுவரை வந்தது. 2004 இல் ஈஸ்ட் பெங்கால் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய கால்பந்து வரலாற்றில் தாங்கள்தான் சூப்பர் அணி என்பதை மோகன் பகான் உறுதிசெய்துள்ளது.
-----------