
ஈரான் வந்துள்ள அல்-நாஸர் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு செளதி அரேபிய கால்பந்து அணி ஈரானில் காலடி எடுத்துவைப்பது இதுவே முதல் முறையாகும். ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்னர் நடைபெற்ற முக்கியமான நிகழ்வாகும் இது.
குரூப் இ பிரிவில் அல்-நாஸர் கால்பந்து அணி, ஈரானின் பெர்ஸிபோலீஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
ரொனல்டோ தலைமையிலான செளதி அரேபிய அணி வருவகை ஈரான் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செளதி அரேபியா மற்றும் ஈரான் இடையே மீண்டும் உறவு ஏற்பட்டுள்ளதை கொண்டாடும் வகையில். ரொனால்டோவின் ரசிகர்கள் அவரது புகைப்படம் மற்றும் பேனர்களுடன் தெருக்களில் உற்சாகத்துடன் வலம் வந்தனர்.
செளதி மற்றும் ஈரான் அணிகளுக்கு இடையே எதிர்காலத்தில் போட்டி நடத்துவது குறித்து உள்ளூர் கால்பந்து சங்கங்களுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஆசிய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது முந்தைய உடன்பாட்டிலிருந்து மாறுபட்ட முக்கிய அம்சமாமகும். இரு நாடுகளுக்கும் இடையே உறவில் விரிசல் இருந்ததால் பொதுவான இடத்திலேயே போட்டிகள் நடைபெற்று வந்தன. 2016 ஆம் ஆண்டிலிருந்து செளதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் ஈரான் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதிலும் ரொனால்டோவின் ஆதரவாளர்கள் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் ஊடுருவி ரொனால்டோவுக்கு ஆதரவாக கோஷ்ங்களை எழுப்பினர். போர்ச்சுகல் அணி கேப்டனின் படங்களை தூக்கிப்பிடித்து வரவேற்றனர். போர்த்துகீசிய சூப்பர் ஸ்டாரான ரொனால்டோவை பார்க்க அவரது அணி சென்ற பேருந்தை ரசிகர்கள் விடாமல் துரத்திச் சென்றனர் என்று அல்-நாஸர் குறிப்பிட்டுள்ளது.
வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள், பெண்கள், ஆடவர்கள் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். ரொனால்டோவுக்கு பெர்சபோலீஸ் அணி ஆதரவாளர்கள் கையால் நெய்யப்பட்ட விலையுயர்ந்த ஈரானிய கம்பளத்தை அளித்து வரவேற்றனர். இதை அல்-நாஸர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.