முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!

IND vs AUS 1st ODI
IND vs AUS 1st ODI

பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் நடைபெற்ற முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை, இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 276 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 48.  ஓவர்களில் 281 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இந்திய அணி பந்துவீச்சாளர் முகமது ஷமி 51 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது, சுபம்கில், ருதுராஜ் கெய்க்வேட், கே.எல்.ராகுல், சூரியகுமார் ஆகியோரின் சிறப்பான பேட்டிங் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அனைத்துவிதமான போட்டிகளிலும் நெ.1 என்ற இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

277 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி களத்தில் இறங்கியது. தொடக்க ஆட்டமே சிறப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணி  விக்கெட் நஷ்டமின்றி 142 ரன்கள் சேர்த்திருந்தது. ஆனால், 185 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ருதுராஜ் 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜம்பா வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூவாகி அவுட்டானார். சுபம் கில் 74 ரன்களில் ஜம்பா பந்துவீச்சில் அவுட்டானார். ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களில் ரன் அவுட்டானார். இஷான் கிஷன் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் இங்கிலிஸிடம் காட்ச் கொடுத்து அவுட்டானார்.

ருதுராஜ் 77 பந்துகளை சந்தித்து 71 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும். சுபம் கில் 63 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். சொந்த ஊரில் விளையாடிய சுபம்கில், சிறப்பான ஆட்டத்தை அளித்தார். கேப்டன் கே.எல்.ராகுல் 58 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார்.

இதையடுத்து இந்திய அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 281 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

முன்னதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, அசத்தலாக பந்து வீசி 51 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தமது சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி வீர்ர்களை திக்குமுக்காடவைத்தார் ஷமி. பும்ரா, அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஷர்துல் 10 ஓவர்கள் வீசி 78 ரன்களை கொடுத்த போதிலும் விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை.

மிட்சல் மார்ஷ் 4 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமி வீசிய பந்தை அடிக்கப் போய் ஸ்லிப் திசையில் சுபம் கில்லிடம் காட்ச் கொடுத்து அவுட்டானார். டேவிட் வார்னரும் (52), ஸ்டீவ் ஸ்மித்தும் (41) ஓரளவு நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் கூட்டாக சேர்த்தனர்.

டேவிட் வார்னர் 52 ரன்களில் ஜடேஜா வீசிய பந்தில் கில்லிடம் காட்ச் கொடுத்து அவுட்டானார். மார்னஸ்லபுசாக்னே 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் வீசிய பந்தை அடிக்க முற்பட்டு ஸ்டம்ப் அவுட்டானார்.

எனினும் ஜோஷ் இங்லிஸ் (45), மார்கஸ் ஸ்டோனிஸ் (29) இருவரும் 6 வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். மாத்யூ ஷார்ட் 2 ரன்களில் அவுட்டானார். கேப்டன் கம்மின்ஸ் 21 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட்டாகமல் இருந்தார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com