இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த கோலி, ராகுல்! ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சித் தோல்வி!

Kohli & rahul
Kohli & rahul

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை  6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணியின் விராட் கோலி, ராகுல் இருவரும் அரை சதம் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினர். ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 28 ரன்கள் மட்டும் கொடுத்து ஆஸ்திரேலியாவின் மூன்று விக்கெட்டுகளை சாய்த்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் எடுத்தது. அடுத்து விளாயாடிய இந்திய அணி 41.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

விராட் கோலி 85 ரன்கள் குவித்தார். கே.எல்.ராகுல் 97 ரன்கள் குவித்து கடைசிவரையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா களம் இறங்கியது. 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணியின் இஷான் கிஷன் மற்றும் ரோஹித் இருவரும் டக் அவுட்டாயினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் ரன் ஏதும் எடுக்காமலே வெளியேறினார்.

அடுத்து விராட் கோலியும், ராகுலும் களத்தில் இறங்கினர். விராட் கோலி தொடக்கத்தில் சறுக்கினார். 8-வது ஓவரில் ஹஸல்வுட் பந்தை கோலி தூக்கி அடிக்க நல்லவேளையாக மிட்செல் மார்ஷ் கேட்சை கோட்டைவிட்டார்.

பின்னர் ரன்கள் எடுக்க வேண்டிய நிர்பந்தம காரணமாக கோலி, ராகுல் இருவரும் பொறுப்புடன் ஆடத் தொடங்கினர். ஆதம் ஜம்பா பந்துவீச வந்தவுடன் ராகுல் அவரின் பந்தை தொடர்ச்சியாக பவுண்டரிக்கு அனுப்பினார். சிறிது நேரத்திலேயே கோலி, தனது அரைசதத்தை எட்டினார். அதைத் தொடர்ந்து கே.எல்.ராகுலும் அரைசதத்தை எட்டினார்.

இந்தியாவுக்கு சோதனை ஏற்படும் நேரங்களில் எல்லாம் அணிக்கு கைகொடுத்து வருபவர் விராட் கோலி. சமீபத்தில் அதாவது 2022 டி20 ஒருநாள் போட்டியில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கோலி அதிரடியாக எடுத்து 82 ரன்கள் எடுத்து அவுட்டாகமல் இருந்தது இந்தியாவின் வெற்றிக்கு உதவியது நினைவுகூரத்தக்கது.

கே.எல்.ராகுலும் முக்கியமான தருணங்களில் சிறப்பாக ஆடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த காரணமாக இருந்திருக்கிறார்.

இறுதியில் இந்தியா 201 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றியை கைப்பிடித்தது.

முன்னதாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்திலேயே தொய்வைக் கண்டது. மிட்சல் மார்ஷ் ரன் ஏதும் எடுக்காமலேயே பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து விளையாடிய டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் இருவரும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தனர்.

குல்தீப் பந்துவீச்சில் தடுமாறிய வார்னர், 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஸ்மித் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா வீசிய பந்தில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து லபுஸ்சாக்னே 27 ரன்களில் ஜடேஜா பந்தில் வீழ்ந்து வெளியேறினார். அலெக்ஸ் கேரியும் ரன் எடுக்காமலேயே ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூவாகி வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. கிளென் மாக்ஸ்வெல் 15 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 28 ரன்களும் எடுத்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தத்து.

இந்திய பந்துவீச்சாளர்களில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், பும்ரா, குல்தீப் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், ஹர்திக், அஸ்வின் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com