
ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பி.சி.சி.ஐ. இணைந்து 50 ஓவர் ஒருநாள் உலக்க் கோப்பை போட்டியை இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல்வர் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடத்துகின்றன.
அக்டோபர் 5 ஆம் தேதி ஆமதாபாதில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. 10 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 15 இல் மும்பையிலும் 16 இல் கொல்கத்தாவிலும், இறுதிப் போட்டி நவம்பர் 19 இல் ஆமதாபாதிலும் நடைபெறுகிறது.
உலகக் கோப்பை போட்டி தொடங்க இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
ரோகித் சர்மா கேப்டனாகவும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளார். காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஆசிய கோப்பைக்கான போட்டியில் இடம்பெறவில்லை. இப்போது அவர் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார்.
டி-20 போட்டியில் உலகின் நெம்பர் ஒன் ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார். சமீபகாலமாக அவர் ஒரு நாள் போட்டியில் தனது திறமையை சரிவர வெளிப்படுத்தாவிட்டாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் என்ற முறையில் அவர் அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பேக் அப் விக்கெட் கீப்பர் இஷான் கிஷானுக்கும் அணியில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா, பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஜஸ்ப்ரீத் பும்ரா அணியில் இடம்பெற்றுள்ள நிலையில் பிரசித் சேர்க்கப்படவில்லை.
முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகுர், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.