இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: அஸ்வின், சூர்யகுமார், ஸ்ரேயாஸ் சாதிப்பார்களா?

india vs australia ODI
india vs australia ODI

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மொஹாலியில் தொடங்குகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பஞ்சாபில், மொஹாலியில் நடைபெறுகிறது. இந்த தொடர் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டிக்கு முன்னோட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியை பொருத்தவரை ஆசிய கோப்பையை வென்ற உற்சாகத்தில் களம் இறங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நான்கு வீரர்களுக்கு முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி, ஆஸ்திரேலாவை சந்திக்கிறது.

இன்றைய போட்டியில் அனைவரது கவனமும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினிடம்தான் உள்ளது. கடந்த 2022 ஆண்டு ஜனவரிக்கு பிறகு அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார். ஆனாலும், அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை போட்டியில் அக்ஸர் படேல் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக பெங்களூருவிலிருந்து வாஷிங்டன் சுந்தர் வரவழைக்கப்பட்டார். ஆனால், இலங்கையை இந்தியா எளிதில் வென்றதை அடுத்து சுந்தர், பேட்டிங்கில் தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அவரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அஸ்வினை நாங்கள் பரீட்சை பார்க்கவில்லை. பந்துவீச்சாளர்கள் எவரேனும் காயமடைந்தால் அவருக்கு பதிலாக களம் இறக்கவே அவரை அணியில் சேர்த்துக்கொண்டோம் என்றார் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர், தனது திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் ராகுல் திராவிட்.

உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சூரிய குமார் யாதவ், இந்த ஒருநாள் போட்டிகளில் தமது திறமையை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். டி20 ஒருநாள் போட்டியில் ரன்களை குவித்த சூரியகுமார் யாதவ், 50 ஓவர் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டியில் ரன்கள் எடுக்க போராட வேண்டியதாயிற்று. எனினும் அவருக்கு இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முதுகு வலி காரணமாக ஆசிய கோப்பை மற்றும் சூப்பர் 4 போட்டிகளை தவறவிட்ட ஸ்ரேயாஸ் ஐயருக்கு இப்போது வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவுடன் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் 2-3 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணியும் வீர்ர்கள் காயம் காரணமாக தடுமாறுகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ஆட முடியாமல் போன கேப்டன் கம்மின்ஸ் அதிலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார். ஆனால், காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவரும் மிட்செல் ஸ்டார்க், கிளென் மாக்ஸ் வெல் இருவரும் உடல்தகுதி பெறாததால் முதல் ஒருநாள் போட்டியில் அவர்கள் இடம்பெறவில்லை. எனினும் ஸ்டீவ் ஸ்மித் அணியில் இடம்பெற்றுள்ளது ஆஸ்திரேலியாவுக்கு பலமாகும்.

மொஹாலியில் ஆடுகளம் பேட்ஸ்மென்களுக்கு சாதமாக இருக்கும் என்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பு நிறைந்த்தாகவே இருக்கும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பு.

--------------

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com