ஆசியக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்குமா?

ஆசியக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்
மழையால் பாதிக்குமா?

சியக் கோப்பை (2023) கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதுகின்றன. இலங்கை, கொழும்புவில் உள்ள பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

எனினும், போட்டி நாளான ஞாயிற்றுக்கிழமை மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்படலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக மழை இருந்த போதிலும், வெள்ளிக்கிழமை மழை இல்லாமல் வானம் தெளிவாக இருந்ததால் இரு அணியினரும் பயிற்சியில் ஈடுபட்டனர். எனினும் போட்டி நாளன்று 70 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதுவும் போட்டி தொடங்கும் நேரத்தில் மழை பெய்யலாம் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.

செப்டம்பர் மாதத்தில் கொழும்புவில் சராசரியாக தினமும் மழை பெய்ய 61 சதவீத வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. பருவநிலை மிக மோசமாக இருக்கும் நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், போட்டியை நாளை மறுநாள் தொடரலாம் என்ற முடிவில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்கிய ரசிகர்கள், அதை பத்திரமாக வைத்திருக்குமாறும் ஒருவேளை மழையால் ஆட்டம் தடைபட்டு மறுநாள் ஆட்டம் தொடர்ந்தால் அதே டிக்கெட்டை பயன்படுத்தி போட்டியை கண்டு ரசிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஒரு சவாலாக இருந்தாலும், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆசியக் கோப்பை 2023 ஒரு நாள் சர்வதேச போட்டி இரண்டாவது கட்டத்தில் உள்ளது. சூப்பர் 4 போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இடம்பெற்றுள்ளன. அனைத்து அணிகளும் மற்றொரு அணியை எதிர்த்து விளையாடும். இறுதிப் போட்டி வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com