ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி! 63 பந்துகளில் சதம் அடித்து ரோகித் சாதனை!

Rohit Sharma
Rohit Sharma

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்தியா ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ரோகித் சர்மா 84 பந்துகளை சந்தித்து 131 ரன்கள் குவித்ததும். ஜஸ்ப்ரீத் பும்ரா 39 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்த்தும் ஆட்டத்தின் சிறப்பு அம்சங்களாகும்.

இந்த போட்டியில் ரோகித் சர்மா, உலக கோப்பை போட்டியில் அதிக சதம் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் கபில்தேவின் 72 பந்துகளில் சதம் என்பதை முறியடித்து 63 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் உலக கோப்பை போட்டியில் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் அடித்த 6 சதங்களே சாதனையாக இருந்தது. ஆனால், உலக கோப்பை போட்டியில் 7 சதங்களை அடித்து டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார் ரோகித் சர்மா.

இந்திய அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணி, நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை அபாரமாக வீழ்த்தியது.

உலக கோப்பை போட்டிகளில் 19 இன்னிங்சில் 1,000 ரன்களைக் கடந்து ரோகித், ஆஸ்திரேலிய வீர்ர் டேவிட் வார்னருக்கு இணையான சாதனையைச் செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல சர்வதேச போட்டிகளில் 556 சிக்ஸர்களை விளாசிய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் ரோகித் பெற்றுள்ளார்.

டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் இந்தியாவை வெற்றிகொள்ள நினைக்கவில்லை என்றாலும் அவர்கள் ஓரளவு கணிசமான ரன்களை குவிப்பதிலேயே ஆர்வமாக இருந்தனர். அந்த அணியின் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 80 ரன்களும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 62 ரன்களும் எடுத்தனர். அஸ்மத்துல்லா, ஹர்திக் வீசிய பந்தில் கிளீன் பெளல்டு ஆனார், ஷாஹிதி, குல்தீப் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூவாகி அவுட்டானார். மற்றபடி ஆப்கான் வீரர்கள் எவரும் சொல்லிக்கொள்ளும்படியான ரன்களை எடுக்கவில்லை.

இந்திய அணி பந்துவீச்சாளர்களில் ஜஸ்ப்ரீத் பும்ரா 10 ஓவர்கள் பந்துவீசி 39 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா 2, குல்தீப் மற்றும் ஷர்துல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.அடுத்து விளையாடிய இந்திய அணி 35 ஓவர்களிலேயே 273 ரன்கள் குவித்து அபார வெற்றிபெற்றது.

இதையும் படியுங்கள்:
அகதியாக தன் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய ஆப்கான் வீரர் ரஷீத் கான் பற்றி தெரியுமா?
Rohit Sharma

ரோகித் சர்மா அதிரடி ஆட்டம் மூலம் 131 ரன்கள் குவித்தார். இஷான் கிஷன் 47 ரன்கள் எடுத்தார். விராட் கோலி கடைசிவரை அவுட்டாகாமல் 55 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் கடைசிவரை அவுட்டாகாமல் 25 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் இந்தியா 273 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

ஆப்கான் பந்துவீச்சாளர்களில் ரஷீத்கான் மட்டும் 57 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.வருகிற 14 ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தானுடன் ஆமதாபாதில் மோதுகிறது. 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான், தில்லியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com