
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிகளை அடுத்த அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி, நவம்பர் 19ம் தேதி வரை நடத்துவதென திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணித் தேர்வாளர்கள் 15 பேர் கொண்ட அணியைத் தேர்வு செய்து உள்ளதாகவும், அந்தத் தேர்வுப் பட்டியல் நாளையோ அல்லது அதற்கு மறுநாளோ இறுதி செய்யப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான கே.எல்.ராகுல் தனது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சில காலம் ஓய்வில் இருந்து குணமடைந்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அவர் முழு உடல் தகுதி பெற்றிருந்தாலும், சிறு வலியின் காரணமாக இந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி, கே.எல்.ராகுல் நடப்பு ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நான்கில் மட்டுமே பங்கேற்பார் என்று குறிப்பிடப்பட்டிந்தது.
அதையடுத்து, இன்று (4.9.2023) நேபாளத்துக்கு எதிராக நடைபெறும் போட்டியில் அவர் பங்கேற்று ஆடுவார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் தேர்வு குழுக் கூட்டம் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது. அந்தத் தேர்வு பட்டியலில் தற்போது ஆசியக் கோப்பை போட்டியில் இடம்பெற்றிருக்கும் 18 பேரில் சாம்சன், பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா ஆகிய மூவரைத் தவிர்த்து மற்ற 15 பேரும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் காயம் காரணமாக ஓய்வில் இருந்து தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் கே.எல்.ராகுல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெறப்போவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியல் தயாராக உள்ளது. ஆனாலும், அதை பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்தப் பட்டியலில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்பதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சிலருக்கும், பெருவாரியான ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பு இருப்பது என்னவோ நிஜம்தான்!