ஜூரிச் டயமண்ட் லீக்: 85.71 மீ ஈட்டி எறிந்து 2-ம் இடத்தை பெற்றார் நீரஜ் சோப்ரா!
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஜூரிச்சில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில் 85.71 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்த போட்டியில் செக். குடியரசின் ஜாகப் வாட்லெட்ஜ் 88.86 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து முதல் இடம் வென்றார்.
நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பில் 80.70 மீ. ஈட்டி எறிந்தார். பின்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது முயற்சிகள் அவர் பவுல் ஆனார். அது அவரை ஐந்தாவது இடத்துக்கு கொண்டு சென்றது. அப்போது ஜெர்மனியின் ஜூலியன் வெபர் அட்டவணையில் முன்னிலை பெற்றிருந்தார்.
சோப்ரா நான்காவது வாய்ப்பில் 85.22 மீட்ட்ர் தொலைவு ஈட்டி எறிந்து புள்ளிப்பட்டியலில் மீண்டும் இரண்டாம் நிலையை அடைந்தார். அப்போது ஜேகப் வாட்லெஜ் முதலிடத்தில் இருந்தார். ஐந்தாவது முறையும் சோப்ரா பவுல் ஆனார். கடைசி முயற்சியில் சோப்ரா 85.71 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்தார்.
சமீபத்தில் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
சோப்ரா, தனது முதல் வாய்ப்பிலேயே 88.77 மீட்டர் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
2023 ஆம் ஆண்டு தங்கம் வெல்வதற்கு முன்பாக சோப்ரா, ஓரேகான் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (2022) வெள்ளிப் பதக்கம் வென்றார். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் அஞ்சு ஜார்ஜ் தங்கம் வென்றார். அதன் பிறகு சமீபத்தில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது வீர்ர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற தோஹா டயமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து முதல் இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் தங்கம் வென்று சோப்ரா சாதனை படைத்தார். 25 வயதான சோப்ரா, தொடர்ந்து பல போட்டிகளில் முன்னிலை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.