தடகளத்தில் தடம் பதித்த 
நீரஜ் சோப்ரா!

தடகளத்தில் தடம் பதித்த நீரஜ் சோப்ரா!

“ஈட்டி எறிதலில் இலக்கு இல்லை. முந்தைய இலக்கை கடந்து அடுத்த இலக்கை நோக்கி முன்னேற விரும்புகிறேன். பதக்கங்கள் பல வென்றிருந்தாலும் இன்னும் அதிக தூரம் ஈட்டி எறிந்து சாதனையை தொடர வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்” என்கிறார் தடகளத்தில் தடம் பதித்து தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா.

ஹங்கேரியில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 88.17 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இதன் மூலம் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. இந்த போட்டியில் மேலும் இரு இந்தியர்களான  கிஷோர் ஜேனா 5-வது இடத்தையும், டிபி.மானு 6-வது இடத்தையும் பிடித்தனர்.

ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர், டைமண்ட் லீக் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்தியர், ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம், காமன்வெல் போட்டியில் தங்கம் என தடகளத்தில் தங்கம் வென்று சாதித்துள்ளார் நீரஜ் சோப்ரா.

இந்த பதக்கங்களை வென்று விட்டதால் நான் சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை. இன்னும் அதிக தூரம் ஈட்டி எறிந்து சாதனைகளைத் தொடர்ந்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கவேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

தற்போது 88.17 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து சாதனை படைத்தாலும் 90 மீட்டர் இலக்கை அடையவேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறேன். அதற்காக எனக்கு நானே நெருக்கடி கொடுக்கவில்லை. எனினும் நேரம் வரும்போது இலக்குகள் எட்டப்படும் என்று நினைக்கிறேன்.

ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. சவாலான இந்த போட்டியில் தங்கம் வென்றதற்காக பெருமை கொள்கிறேன். அடுத்து பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக விரும்புகிறேன் என்றார் நீரஜ் சோப்ரா. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com