ஷபீக், ரிஸ்வான் அதிரடி சதம்! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்!

Pakistan beat Sri Lanka
Pakistan beat Sri Lanka

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, நேற்று ஹைதராபாதில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஷபீக், ரிஸ்வான் இருவரும் சதம் அடித்து பாகிஸ்தான் வெற்றியை உறுதிசெய்தனர். இலங்கை அணி கணிசமான ஸ்கோரை எட்டியிருந்த போதிலும், பாகிஸ்தான் அதை விரட்டிச் சென்று வெற்றியை கைப்பிடித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 344 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 122 ரன்கள் குவித்தார். இதில் 14 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடங்கும். மற்றொரு வீரரான சமரவிக்ரமவும் நின்று ஆடி சதம் அடித்தார். 108 ரன்கள் எடுத்த அவர் ஹஸன் வீசிய பந்தில் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். நிசங்கா அரை சதம் அடித்து 51 ரன்களில் அவுட்டானார். இதர வீரர்கள் குறைந்த ரன்களிலேயே வெளியேறினர். இறுதியில் இலங்கை 344 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹஸன் 4 விக்கெட்டுகளையும், ரவூப் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அஃப்ரிடி, நவாஸ், ஷாதாப் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அதிரடியாக விளையாடி ஜெயிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்த அணியின் அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான் இருவரும் அதிரடி காட்டி ஆடி சதம் போட்டனர். அப்துல்லா ஷபீக் 113 ரன்கள் எடுத்தார். ஒருநாள் போட்டியில் ஷபீக் எடுத்த முதல் சதமாகும் இது. ரிஸ்வான் கடைசிவரை அவுட்டாகாமல் 131 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். ரிஸ்வான் எடுத்த 131 ரன்களில் 8 பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 10 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் பாகிஸ்தான் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 345 ரன்கள் குவித்து வெற்றியை கைப்பிடித்தது.

இங்கிலாந்துக்கு முதல் வெற்றி:

உலகக் கோப்பைக்கான மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி, 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது. இங்கிலாந்துக்கு இது முதல் வெற்றியாகும். நடப்பு சாம்பியனானா இங்கிலாந்து, முதல் போட்டியில் நியூஸிலாந்திடம் தோற்றது நினைவிருக்கும்.

டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மலான் 140 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச பந்துவீச்சாளர் மெஹதி ஹஸன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஷோரிப் இஸ்லாம்  3 விக்கெட்டையும், தஸ்கின் அகமது 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் விளையாடிய வங்கதேச அணி 48.2 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் ரீஸ் டோப்லி 4 விக்கெட்டுகளையும், கிறிஸ்வோக்ஸ் 2, லியம் லிவிங்ஸ்டன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com